|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2011

காங்கிரஸை தோற்கடிப்பதே இலக்கு - சீமான்

இலங்கையில் தழிர்களைக் கொன்றொழித்து அவர்களுடைய வாழ்க்கை சிதறடிக்கவும், தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் கொல்லப்படுவதை தடுக்கத் தவறிய காங்கிரஸ் கட்சியை தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்களது இலக்கு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை நாம் தமிழர் கட்சி எவ்வாறு அணுகுவது என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் ஆன்றோர்ப் பேரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈழத் தமிழனத்தின் 60 ஆண்டுக்கால விடுதலைப் போராட்டத்தை அழிக்க டெல்லி அரசு துணை போனது. அதற்குப் பாடம் புகட்ட வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, எந்தத் தொகுகளிலெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்து அதனைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களிடம் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்து போட்டியிட்டாலும் அல்லது தனியே போட்டியிட்டாலும் அதனைத் தோற்கடிப்பதே தங்களது பணியாக இருக்கும் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரை செய்யும் போது ஒவ்வொரு தொகுதியிலும் அந்தக் கட்சியைத் தோற்கடிக்கக்கூடிய கட்சியின் சின்னத்தின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் நாம் தமிழர் ஈடுபடும்.

ஈழத் தமிழனம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வு சிதறிடிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பழிவாங்கவே காங்கிரஸை தோற்கடிப்பது என்கின்ற ஒருமித்த முடிவிற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளதாக சீமான் கூறினார்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியின் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்வீர்களா என்று கேட்டதற்கு, எந்தக் கூட்டணிக்கும் ஆதரவாகவும் தங்களது பரப்புரை இருக்காது என்றும், தங்களது பரப்புரையின் ஒரே நோக்கு இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தடுப்பதாகவே இருக்கும் என்று பதிலளித்த சீமான், காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளில் நாங்கள் எந்தப் பரப்புரையையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் அப்பொழுது உங்களுடைய நிலை என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, காங்கிரஸை எதிர்ப்பதில் எந்த மாற்றமும் இருக்காது என்று சீமான் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சீமானுடன், இயக்குனர் மணிவன்னன், புலவர் கீ.தா.பச்சையப்பன், பேராசிரியர் இறைபுலவனார், பேராசிரியர் தீரன் ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...