|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 July, 2011

20 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் வேதாரண்யம் ரயில் போக்குவரத்து தொடங்க கோரிக்கை!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோடியக்கரையிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. என்ன காரணத்தினாலோ 1990-ம் ஆண்டு பயணிகள் ரெயில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஆங்காங்கே இருந்த ரெயில்வே ஸ்டேசன்களும் இடித்து அகற்றப்பட்டது. பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டு பின் அகஸ்தியன்பள்ளி திருத்துறைப்பூண்டி வரை உப்பு ஏற்றுமதிக்காக சரக்கு ரெயில் இயக்கப்பட்டது பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது.    அதற்கு பின் 1999-ம் ஆண்டிலிருந்து திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்தியன்பள்ளி வரை ரெயில்பஸ் இயக்கப்பட்டது. இந்தியாவிலேயே மேற்கு வங்காளத்திற்கு அடுத்து இங்கு தான் ரெயில்பஸ் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரெயில்பஸ் மூலம் குரவப்புலம், நெய்விளக்கு, அகஸ்தியன்பள்ளி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர். இந்த ரெயில்பஸ் போக்குவரத்தும் சுனாமிக்கு பின் நிறுத்தப்பட்டது. இந்த மார்க்கத்தில் மக்கள் பயணம் தவிர இங்கு உற்பத்தியாகும் உப்பு, புகையிலை, மீன் ஏற்றுமதிக்கும் ரயில் போக்குவரத்து மிகவும் பயன்பட்டு வந்தது.

இங்கு உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர்.

ஆனால் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டவுடன் லாரி மூலம் உப்பு அனுப்புவதில் கூடுதல் செலவு என்பதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆண்டுக்கு உப்பு ஏற்றுமதி மூலம் ரெயில்வே துறை 2 கோடி லாபம் ஈட்டியது.

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் வழித்தடமாக அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இருந்தது. பல கோடி ரூபாய் ஈட்டி தந்த இந்த வழித்தடத்தை எவ்வித காரணமும் இன்றி ரெயில்வே துறை நிறுத்தி விட்டது. 20 ஆண்டு காலமாக பொதுமக்கள் கொடுத்த எந்த கோரிக்கையும் மத்திய அரசு ஏற்க வில்லை.

 இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவித்தனர். ஆனால் இந்த மார்க்கத்தில் அதற்கான எந்தவித ஆரம்ப வேலையும் தொடங்கப்படவில்லை.

எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, நலிந்து வரும் உப்பு தொழிலை காப்பாற்ற அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயில் பாதையில் மீண்டும் ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...