|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 July, 2011

பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள்!!!

திருவனந்தபுரத்து பத்மநாப சுவாமி கோவிலில், விலை மதிக்க முடியாத அளவு, விலை உயர்ந்த பொக்கிஷங்கள் கிடைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. திருவனந்தபுரம், தொன்று தொட்டே புகழ் வாய்ந்த நகரமாக இருந்தது என்பது, "அந்தமிழ் புகழ் அனந்தபுரம்' என, நம்மாழ்வார் பாடியுள்ளதில் இருந்தே அறியலாம். இங்குள்ள திருமால் கோவிலையும், பெருமாளையும், "அனந்தபுர நகர் ஆதி அம்மான்' என்று அவர் கூறுகிறார். அனந்தபுரம் என்பது ஊரையும், நகர் என்பது விண்ணகரம் என்றும், ஆதி என்பது பெருமாளையும் குறிக்கும். இங்கு உறைகின்ற திருமால், "பாம்பணையில் பள்ளிகொண்ட பரமமூர்த்தி' என,ஆழ்வார் பாடுகிறார்.

முதன் முதலில் சேரமான் பெருமாள் என்ற பட்டம் பூண்ட பாஸ்கர ரவிவர்மன் என்ற சேர அரசர், கி.பி., 1050ல், பத்மநாப சுவாமி கோவிலுக்கு திருப்பணி செய்வித்தார். ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் இக்கோவிலோடு தொடர்பு கொண்டவர். முகுந்த மாலை என்ற பதிகத்தை இயற்றியிருக்கிறார். எளிமையான அமைப்புடன் இருந்த கோவிலை, கேரள கலை மரபுப்படி 12ம் நூற்றாண்டில் ஆண்ட வேனாட்டு அரசர், 1325லிருந்து 1355 வரை ஆண்ட வீர கோதை கேரள வர்மன் என்பவர் புதுப்பித்துக் கட்டினார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. 1168ல் ஆண்ட வீர ஆதித்ய வர்மன் என்பவர், இக்கோவிலுக்கு அருகிலிருந்த, மித்திரானந்தபுரம் கோவிலை கட்டி, பத்மநாப சுவாமி கோவிலின் இணைக் கோவிலாக மாற்றினார். பத்மநாபர் கோவில் ஏழு ஏக்கர் பரப்பில் அமைந்தது. தெப்பக்குளம், 25,700 சதுர அடி அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோவிலினுள்ளே கிருஷ்ணன் கோவில், நரசிம்மர் கோவில், அய்யப்பன் கோவில் ÷க்ஷத்திர பாலன் கோவில், முதலிய கோவில்களும் உள்ளன. பண்டைக்காலம் தொட்டே பத்மநாப சுவாமி கோவிலில், சேர அரசர்களுடைய குலதெய்வமாக திகழ்ந்துள்ளது.
பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானம், அதன் மேல் விமானம், அதற்கு முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபம், மடப்பள்ளி திருச்சுற்று மண்டபம், அபிஸ்ரவண மண்டபம், கோவிலைச் சுற்றி ஆயிரம் விளக்குகள் இருக்கும் மரச்சட்டங்களுடன் கூடிய விளக்கு மாடம் மற்றும் கோவிலின் உட்பகுதி முதலிய அனைத்துமே, ராம மார்த்தாண்ட வர்மா, 1459லிருந்து 1461 வரை திருப்பணி செய்வித்தார்.அதாவது, இன்றுள்ள பத்மநாப சுவாமி கோவிலின் பெரும்பாலான பகுதிகள், கி.பி., 1460ல் தோற்றுவிக்கப்பட்டவை. இதற்கடுத்து, 1481ல் வீரகோதை மார்த்தாண்ட வர்மா, இங்கு மகாபாரதம் வாசிக்க ஏற்பாடு செய்தார். பரணித்திருநாள் ஜெயசிம்ம தேவர் என்பவர், 1486ல் பல சமுதாய சீர்த்திருத்தங்கள் செய்து கொடுத்தார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த பாண்டிய மன்னர், பராக்கிரம பாண்டிய தேவர், பத்மநாப சுவாமி கோவிலுக்கு ஒரு நிலம் தானமாக கொடுத்திருக்கிறார். கோவிலின் திருச்சுற்று சுத்தம்பலம் மடப்பள்ளி முதலியவற்றுக்கு கருங்கல் தரை பரவப்பட்டது. பல திருவாங்கூர் மன்னர்கள் தாங்கள் செய்த சிறு பிழைக்கு, தண்டமாக பொருட்களும் கொடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய கி.பி., 1499ல், ஒரு போரில் ஏற்பட்ட பிழைக்காக, பன்னிரெண்டு வெள்ளிக் கலசங்களையும், சில கல் சிற்பங்களையும் கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். 1500ல், கோவிலுக்குள், தைத்த துணிமணிகளை அணிந்து வரக்கூடாது என்று ஓர் ஆணை பிறப்பித்தார்.அதன்படி, கடந்த 500 ஆண்டுகளாக இம்மரபு இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1532ல் திருப்பாபூர் மூத்த திருவடி, கோவிலில் இருந்த விலை உயர்ந்த அத்தனை ஆபரணங்களுக்கும் ஒருவிவரப் பட்டியல் தயாரித்தார். பின்பு கி.பி., 1686ல், ஒரு பெரும் தீ, கோவிலில் பரவியதால், குறிப்பாக, அபிஸ்ரவண மண்டபம், நரசிம்ம சுவாமி கோவில் முதலியவற்றில் இருந்த பகுதிகள் தீக்கு இரையாயின. அப்பொழுது விமானத்தின் கூரைப் பகுதி எரிந்து, மூலவர் மேல் விழுந்தது. மூலவர் உருவம் மரத்தால் செய்யப்பட்டிருந்தாலும், அது எவ்வித சேதமும் இன்றி தப்பியது.
அரசர் வகுத்த வழிமுறைகள்: கார்த்திகை திருநாள், ரவிவர்ம ராஜா, இந்த தீக்கிரையான பகுதிகளை புதுப்பித்து, சாந்தி அபிஷேகம் செய்வித்தார். இதுபோன்ற கோவில் பற்றிய செய்திகள் எல்லாம், ஆயிரக்கணக்கான ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு, பத்மநாப சுவாமி கோவிலில் இன்று வரைகட்டுக் கட்டாக வைக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு மொத்தம் உள்ள சுவடிகள் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும். இவற்றுக்கு சுருணை என்று பெயர். இவற்றில் சில படிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் என்ற தலைப்பில், அஸ்வதி திருநாள் கவுரி லக்ஷ்மிபாய் எழுதியுள்ள, சிறப்பான புத்தகம், பாரதிய வித்யா பவன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 1425ல், வீர ரவிவர்மர் என்ற மன்னர், பத்மநாப சுவாமி கோவில் உட்புறத்தில் ஒரு ஆவண காப்பகத்தை கட்டி, அவற்றுள் கோவில் ஆவணங்கள் மற்றும் முக்கிய பொருட்களை வைக்க ஏற்பாடு செய்தார். 1486ல், இரு வகையான கணக்கர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவர், கரணக் கணக்கர் என்று அழைக்கப்பட்டார். அவர், சட்டப்பூர்வமான ஆவணங்களை பாதுகாக்கவும், தயாரிக்கவும் அமர்த்தப்பட்டார்.மற்றவர் பண்டாரக் கணக்கர் என்று அழைக்கப்பட்டார்.

இவர், கோவிலுக்கு கொடுக்கப்படும் தங்கம், பணம், விலை உயர்ந்த அணிகலன்கள் முதலியவற்றின் பட்டியல் தயாரிக்கவும், கணக்கு எழுதவும், பாதுகாக்கவும் அமர்த்தப்பட்டார். இவை எல்லாம் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே, நம் அரசர்கள் வகுத்த வரன்முறைகள்.இப்பெரும் சொத்துக்கள் யாரைச் சேர்ந்தவை என்பதில், விவாதங்கள் எழுந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் அவரவர் மனம் போனபடி எழுதப்பட்டுள்ளனவே தவிர, சட்டத்தின் நோக்கில் ஆய்ந்து எழுதப்பட்டவை அல்ல. ஒருவர் இவை நாட்டுக்கு சொந்தமானவை, ஆதலின் அரசே எடுத்துக் கொண்டு மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என, மிகவும் ஆடம்பரமான விளம்பரத்துடன் கூறியிருக்கிறார்.

இவற்றை அரசு என்ற போர்வையில், அரசியல்வாதிகள் அபகரித்து பயனற்றதாக செய்து விடுவர். எப்படி இருப்பினும், இக்கருத்து சட்டத்திற்கு விரோதமானது. மற்றொரு கருத்து, இது, திருவிதாங்கூர் மன்னருக்கு சொந்தமானது என்பதாகும். இதுவும் சட்டத்திற்கு புறம்பானதால் ஏற்புடையது அல்ல.மன்னருக்காக யாரும் இச்செல்வங்களை கொடுக்கவில்லை. மூன்றாவது கருத்து, இவை, கோவிலுக்கு சொந்தமானவை. இக்கருத்தும், பொதுப்படையாக கூறப்பட்டுள்ளதே ஒழிய, சட்ட நுணுக்கங்களுக்கு ஒத்து வரவில்லை. அதற்கு காரணம், கோவில் என்ற சொல்லின் விளக்கத்தை பொருத்ததாகும். கோவில் என்றால், பொதுவாக, "தெய்வம் உறைகின்ற இடம்' என்றுதான் கூறுவர், ஆதலின் இச்செல்வங்களை கோவிலாகிய இடத்திற்கு கொடுக்கவில்லை.இவை, அனைத்து கோவில்களில், இரத்தினப் பண்டாரம், பொற் பண்டாரம் என்பதைப் போல, கோவில் பண்டாரத்தில் இருக்கின்றன. ஆதலின், இக்கோவிலில் உறையும் தெய்வத்திற்குத்தான், பக்திப் பெருக்கினாலே கொடுத்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. இவற்றை காணிக்கை என்றும் அழைப்பது மரபு.

பண்டைய காலத்திலிருந்து இந்திய நாட்டில் இவற்றை கோவிலில் உறையும் தெய்வத்திற்கே கொடுத்ததாக பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் கூறுகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் கி.மு., இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுகள் உள்ளன.பழங்கால மரபு: தமிழகத்திலும், பல்லவர் காலம் தொட்டு இதுபோன்ற மரபை காண்கிறோம். திருத்தணி மலைமேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபராஜித பல்லவன், ஒன்பதாம் நூற்றாண்டில், தான் கொடுத்த தானத்தை செப்பேடுகளில் எழுதும்போது, "திருத்தணி மலைமேல் பிராணார் சுப்பிரமணியருக்கே நீரோடு அட்டிக் கொடுத்தேன்' என்று தானே கூறுகிறான். இதையே சமஸ்கிருத பகுதியில், "மலைமேல் மாகேஸ்வரனாகிய குமாரனாகிய ஷண்முகனுக்கு பொன் கலசத்திலிருந்து நீர் வார்த்துக் கொடுத்தேன்' என்று கூறுகிறான். தஞ்சை பெருங்கோவிலை கட்டிய ராஜராஜன், "தஞ்சாவூர், நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ராஜராஜேஸ்வரமுடையாருக்கு நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்மற்றும் கொடுத்தார் கொடுத்தனவும் கல்லில் வெட்டுக' என்று எழுதியிருக்கிறான். இங்கு கற்கோவிலாக ராஜராஜேஸ்வரத்தையுடைய தெய்வத்திற்கு நான் கொடுத்தேன் என்பது பொருள். இதிலிருந்து கோவில் வேறு, தெய்வம் வேறு சட்டப்படி குறித்துள்ளான். கேரள தேசத்திலும் இதே மரபுதான் கடைபிடிக்கப்பட்டது. "திருவல்லவாழ்' அப்பனுக்கு கொடுத்தது போன்ற குறிப்புகள் இதையே குறிக்கின்றன. இதுபோல இந்து கோவில்களாகட்டும், பவுத்த கோவில்களாகட்டும், சமண கோவில்களாகட்டும் கோவிலில் உடைய தெய்வத்திற்கு என்பதுசட்டப்படி பொருந்தும்.

இவ்வாறு கூறுவதால் என்ன சிறப்பு எனில், இவ்வரும் செல்வங்களை கோவிலாகிய இடத்திற்கு கொடுக்காமல், அங்கு உறைகின்ற தெய்வத்திற்கு பெரும் பக்தியுடனும், மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் கொடுத்தேன் என்பது பொருள். இது, நம் நாட்டில் பண்டைய காலத்திலிருந்தே பின்பற்றும் மரபு.இதில், மற்றொரு இடரும் ஏற்படக் கூடும். எங்கும் நிறைந்திருக்கும் சர்வேஸ்வரன் ஆகிய தெய்வத்திற்கு, நிலம், பணம், அணிகலன்கள் முதலியவற்றை உடைமை ஆக்கிக்கொள்ள உரிமையுண்டா என்பது கேள்வி. இதன் அடிப்படையில் கடந்த 200 ஆண்டுகளாக இந்திய நாட்டில் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவ்வழக்குகளில் தெய்வத்திற்கு பொருள் கொள்ளும் உரிமை உண்டு என, தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

லண்டனில் நடந்த பத்தூர் நடராஜர் வழக்கில் இக்கேள்வி எழுந்தது. அதை ஆய்ந்து தீர்ப்பளித்த லண்டன் ஐகோர்ட் நீதிபதி தமது தீர்ப்பில், இந்திய சட்டப்படி தெய்வத்திற்கு பொருள் உடைமை கொள்ளும் உரிமை உண்டு. ஆதலின், பத்தூர் கோவிலுக்கு இந்நடராஜர் உரியதாகும். ஆதலின் இச்சிலையை அக்கோவிலுக்கே கொடுத்து விடவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். ஆதலின், திருவனந்தபுரம் கோவிலில் இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து செல்வங்களும், பத்மநாப சுவாமிக்கே சொந்தம். இவற்றை வேறு யாரும் சொந்தம் கொண்டாடவோ, தம் இச்சைப்படி செலவழிக்கவோ முடியாது. குறிப்பாக, இக்கோவிலிலேயே பண்டாரக் கல்லறையில் இவை கிடைத்தது இதை உறுதி செய்கிறது.

அனந்த பத்மநாப சுவாமியை தங்கள் குல தெய்வமாகக் கொண்டு, பத்மநாப தாசன் என்ற பெயரோடு, காலங்காலமாக இவற்றை நேர்மையாக பரிபாலித்து, காத்து, இன்று வரை தந்துள்ள திருவனந்தபுரத்து மன்னர்களுக்கு, இந்திய நாடே தம் வணக்கத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டும், இச்செல்வங்களை இப்போதுள்ள முறைப்படியே பாதுகாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து இருப்பதும், இந்திய மக்களின் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இது, இந்து அரசர்களின் ஈடு இணையற்ற தெய்வ பக்திக்கும், தியாகத்திற்கும் பிரதிபலிப்பதாகத் திகழ்கிறது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...