|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 July, 2011

பொதுக்குழுவில் முடிவு!


 தி.மு.க., தலைவர் பதவியிலிருந்து கருணாநிதி விலகிக் கொண்டு, காமராஜரை போல, "வழிகாட்டுதல் தலைவராக' பொறுப்பேற்க வேண்டும். தலைவர் பதவியை ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ஆதரவாளர்கள், கோவையில் நடக்கவுள்ள பொதுக்குழுவில் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். மாவட்டச் செயலர் பதவியை மாற்றக் கூடாது என முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் மாவட்டச்செயலர்கள் போர்க்கொடி தூக்கவும் ரகசியமாக திட்டமிட்டுள்ளனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின் தி.மு.க.,வுக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைது மற்றும் ஜாமின் மறுப்பு, மத்திய அமைச்சரவையில் தி.மு.க., வுக்கு கைவிரிப்பு என அடுக்கடுக்கான பிரச்னைகளை தி.மு.க., தலைவர் கருணாநிதி சந்தித்து வருகிறார். தற்போது கட்சி ரீதியான பிரச்னையும் அவருக்கு திருகுவலியை ஏற்படுத்தி வருகிறது.
வடசென்னை மாவட்டச் செயலராக பணியாற்றிய வி.எஸ்.பாபு, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவருக்கு பதிலாக மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் பணியாற்றுவார் என தலைமை அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டச் செயலர் சிவாஜியும் தனது மாவட்டச்செயலர் பதவியை மேலிட நிர்பந்தத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக மாதவரம் சுதர்சனம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.வட சென்னை, திருவள்ளூரை தொடர்ந்து சில மாவட்டங்களில் மாவட்டச்செயலர்கள் பதவி பறிக்கப்படுவதற்கான சூழ்நிலையும் நிலவி வருகிறது. அதற்கு காரணம் பார்லிமென்ட், சட்டசபை பொறுப்பாளர்கள் என்ற புது அமைப்பு தி.மு.க., வில் உதயமாக இருப்பதால் தற்போதைய மாவட்டச்செயலர்களிடம் கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது."வீரபாண்டி ஆறுமுகம் பொதுக்குழுவில் தனது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துச் சொல்லக்கூடியவர். அவர் சொல்லும் கருத்துக்கள் கட்சியின் நலன் கருதியே இருக்கும். அதை உதாசீனப்படுத்தக் கூடாது' என கருணாநிதி அடிக்கடி சொல்வதுண்டு. எனவே பொதுக்குழுவில் மாவட்டச்செயலர்களை மாற்றக் கூடாது என தனது எதிர்ப்பை வீரபாண்டி ஆறுமுகம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அவரிடம் ரகசியமாக சில மாவட்டச்செயலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தேர்தல் தோல்வியை கருத்தில் கொண்டு, தலைவர் பதவியிலிருந்து கருணாநிதி விலகிக் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தோல்வி அடைந்ததும் தலைவர் பதவியிலிருந்து காமராஜர் விலகிக் கொண்டு வழிகாட்டுதல் தலைவராக விளங்கியது போல கருணாநிதியும் அதேபோல முடிவு எடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். தங்களது விருப்பத்தை ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலர்கள் பொதுக்குழுவில் பேசவும் திட்டமிட்டுள்ளனர்.இதற்கிடையில் கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சுவதற்காக கொண்டு வரப்படும் பொறுப்பாளர்கள் நிர்வாகத்தை ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலர்கள் விரும்பவில்லை. காரணம், தற்போது உள்ள மாவட்டச் செயலர்களின் எண்ணிக்கையில் ஸ்டாலினுக்கு தான் பெரும்பான்மை இருக்கிறது. அவருக்கு அடுத்ததாக அழகிரி ஆதரவாளர்கள் உள்ளனர்.
தற்போது புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தில் கனிமொழி ஆதரவாளர்களையும் கருணாநிதி இடம் பெற வைத்து விடுவார் என்ற சந்தேகம் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு எழுந்துள்ளது. எந்தப்புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பது தெரியாது என்பதால் எதிர்காலத்தில் அழகிரி ஆதரவாளர்களும், கனிமொழி ஆதரவாளர்களும் கைகேர்த்துக் கொண்டு ஸ்டாலினை எதிர்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வியையும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் எழுப்புகின்றனர்.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத தி.மு.க., பிரமுகர் கூறும் போது, ""தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து கருணாநிதி விடை பெற வேண்டும். பா.ம.க., நிறுவனராக ராமதாசும், தலைவராக ஜி.கே.மணியும் பணியாற்றுவது போல தி.மு.க., வழிகாட்டுதல் தலைவராக கருணாநிதியும், தலைவராக ஸ்டாலினும் பணியாற்ற வேண்டும். மாவட்டச் செயலர்கள் பதவி மாற்றம் விவகாரத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் பெரும்பான்மையான மாவட்டச்செயலர்கள் எதிர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்,'' என்றார்.
குடும்ப ஆட்சியே தோல்விக்கு காரணம் மலைபோல் குவியும் கடிதங்கள்:தேர்தல் தோல்விக்கான காரணங்களை, கோவையில்ஷ வரும் 23, 24 ம் தேதிகளில் நடக்கும் பொதுக்குழுவில் விவாதிக்க, கடிதம் மூலம் அனுப்ப வேண்டும் என தி.மு.க., தலைமை தொண்டர்களை கேட்டுக் கொண்டது.
கட்சியின் இந்த வேண்டுகோளுக்காக காத்திருந்த தொண்டர்களும், நிர்வாகிகளும், கடிதங்களை மலைபோல் குவித்து வருகின்றனர்.ஆட்சியிலும், கட்சியிலும் குடும்பத் தலையீடு, 2ஜி வழக்கு ஆகியனவே தேர்தல் தோல்விக்கான முக்கியக் காரணங்கள் என பலர் கடிதங்களை அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியினருக்கு விடுத்த கோரிக்கையில், "எனது குடும்பத்தினரின் படங்களை விழா அழைப்பிதழ்களில் போட வேண்டாம். அப்படி போட்டால், அந்த நிகழ்ச்சிக்கு நான் வர மாட்டேன் என' அழகிரி கூறியிருந்தார். குடும்ப ஆட்சி என்ற குற்றச்சாட்டின் பின்னணியில், இந்த வேண்டுகோளும் அடங்கியிருப்பதாகக் கூறுகின்றனர்.ஸ்டாலின் மற்றும் அழகிரியின் ஆதரவாளர்கள், தங்கள் தலைவரின் கை ஓங்கியிருக்கும் வகையில் கடிதங்களை அனுப்புவதாகவும் தெரிகிறது. நெருக்கடியான கட்டத்தில் கூடும் பொதுக்குழுவில், "யார் அடுத்தது' என்பதை உறுதி செய்துவிட வேண்டும் என ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் கச்சை கட்டிக் கொண்டு நிற்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல், ஆதாரங்களை வலுசேர்க்க கட்சித் தலைமைக்கு அனுப்பும் கடிதங்களை வலுவானதாக அனுப்பி வருவதாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் கூறுகிறார்.கட்சியை வலுப்படுத்தவும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கெட்ட பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கவும், குடும்ப உறுப்பினர்கள் ஒதுங்கியே நிற்க வேண்டும் என பலர் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
தலைமையின் குடும்பம் தவிர, அமைச்சர், மாவட்ட செயலர் மற்றும் கட்சியின் பிற பொறுப்பாளர்களின் வாரிசுகளும் தேர்தல் தோல்விக்குக் காரணம் என சொல்லுகின்றனர்.வாரிசுகள் வருவதைத் தடை செய்ய கட்சி விதியைத் திருத்த வேண்டும். அமைச்சராக இருந்தவர், மாவட்டம், நகரம், ஒன்றிய செயலர்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். கொலை, நில அபகரிப்பு உள்ளிட்ட பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள கட்சி நிர்வாகிகள் மீது கட்சி நடவடிக்கை வேண்டும் போன்ற கருத்துக்களை தாங்கிய கடிதங்கள் அதிக அளவில் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
கடிதம் மூலம் தெரிவிக்கும் கருத்துக்களை மூடி மறைக்காமல், வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். தவறு செய்த நிர்வாகிகள் பற்றி கருத்துக்கள் கூறியவர்களுக்கு கட்சி பாதுகாப்பு அளிக்க வேண்டும். தகவல் கூறுபவர் மீது பழிவாங்கும் நோக்கில் செயல்படும் நிர்வாகிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிலர் கடிதங்களை அனுப்பியுள்ளதாக பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறினார்.தோல்விக்கான காரணங்கள் குறித்து இதுபோல் வரும் கடிதங்களை தரம் பிரித்து, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் கடிதங்களை தேர்வு செய்யும் வேலை தி.மு.க., தலைமயகத்தில் நடந்து வருகிறது.
கட்சி நிர்வாகிகள் மீது வரும் கடிதங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அதன் மீது தனி விவாதம் நடக்கும் என கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகிறார். தோல்விக்கு கட்சித் தலைமையின் குடும்பத் தலையீடே காரணம் என்பது கட்சித் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.இதற்கான தீர்வுகள் பொதுக்குழுவில் கிடைக்கும் என தி.மு.க., தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். பொதுக்குழுவுக்குப் பின் அதிரடி மாற்றங்கள், புதிய நடைமுறைகள் உருவாகும் என்றும் தொண்டர்கள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...