|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 July, 2011

நீருக்கடியில் சதுரங்க போட்டி புதுச்சேரியில் கின்னஸ் சாதனை!


 நீருக்கடியில் சதுரங்கம் விளையாடி, கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில், விளையாட்டு வீரர்கள் ஈடுபட்டனர். புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான, கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை கோகோ லேண்ட் நீச்சல் குளத்தில், நீருக்குள் சதுரங்கம் விளையாடி, 3 உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி துவக்க விழா நேற்று நடந்தது. அரசு கொறடா நேரு துவக்கி வைத்தார். காலை 11.12 மணிக்கு, 10 சதுரங்க வீரர்கள் 5 ஜோடியாக பிரிந்து, 12 அடி ஆழ நீச்சல் குளத்தில் பிரத்யேக நீச்சல் உபகரணங்கள் அணிந்து, நீருக்குள் மூழ்கியபடி விளையாடினர். நீரின் அழுத்தம், சுவாசப் பிரச்னை உட்பட, பல்வேறு தடைகளைக் கடந்து, 25 நிமிடங்களில் வெற்றிகரமாக விளையாடி முடித்தனர். இதில் ஐயப்பன், லியோ ஆனந்த், விக்னேஷ், ஜெகன்ராஜ் வெற்றி பெற்றனர். ராஜேஷ்குமார், அதிர்ஷ்டசெல்வம் மோதிய போட்டி டிராவில் முடிந்தது. 

இரண்டாவதாக, நீருக்கு மேல் மிதந்தபடியே, சதுரங்கம் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சதுரங்கப் பலகை மிதந்தபடி இருக்க, இரண்டு செஸ் வீரர்கள் நீருக்குள் மிதந்தபடியே, செஸ் விளையாட வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சதுரங்கப் பலகை மிதக்காமல் கவிழ்ந்ததால், இச் சாதனை தோல்வியில் முடிந்தது. மூன்றாவதாக, லியோ ஆனந்த் ஒரே நேரத்தில், 10 பேருடன் 22 நிமிடங்கள் சதுரங்கம் விளையாடினார். போட்டிகளை தேசிய செஸ் நடுவர் நடராஜன், துணை நடுவர் பாஸ்கர், நீச்சல் வீரர் பிரேமானந்தன் ஆகியோர் கண்காணித்தனர். அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரிசர்ச் பவுன்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் நடுவராகப் பணியாற்றினார். நீருக்கடியில் நடந்த சதுரங்கப் போட்டிகள் முழுவதும், பிரத்யேக கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு, கின்னஸ், குளோபல், லிம்கா, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் முதல்வரின் பாராளுமன்றச் செயலர் வைத்தியநாதன், சத்திய சாய் செஸ் பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார், சேலஞ்சர் அகாடமி தலைவர் வெங்கடேசன், ஸ்கூபா டெம்பிள் அட்வென்சர் அரவிந்த், பன்னீர்செல்வம், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...