|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 August, 2011

டாஸ்மாக்கில் எதிர்பார்க்கும் வருவாய் - ரூ.1,78,10,00,00,000....???

டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம், ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரியாக, இந்த ஆண்டு, 17 ஆயிரத்து, 810 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். மத்திய அரசு அனுமதித்துள்ள தொகையை விட குறைவான தொகையே தமிழக அரசு கடனாக பெற உள்ளது,'' என, நிதித்துறை செயலர் சண்முகம் தெரிவித்தார்.

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து, நிதித்துறைச் செயலர் சண்முகம் மற்றும் நிதித்துறை அதிகாரிகள், நிருபர்களிடம் கூறியதாவது: திருத்தப்பட்ட வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில், வருவாய் வரவுகள், 85 ஆயிரத்து, 685 கோடி ரூபாயாகவும், வருவாய் செலவுகள், 85 ஆயிரத்து, 511 கோடி ரூபாயாகவும் இருக்கும். வருவாய் பற்றாக்குறை நீங்கி, 173 கோடி ரூபாய் உபரி வருவாய் இருக்கும். நிதிப் பற்றாக்குறை, 16 ஆயிரத்து, 880 கோடி ரூபாயாக இருக்கும். இந்த பட்ஜெட்டில், பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 8,900 கோடி ரூபாய் செலவாகும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பொறுத்தவரை, ஏற்கனவே உள்ள திட்டத்துக்காக, 150 கோடி ரூபாயும், அதை நிறுத்தியதால், அடுத்த திட்டம் துவங்கும் வரை இடைக்கால செலவுக்காக, 100 கோடி ரூபாயும், புதிய திட்டத்தை செயல்படுத்த, 150 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பின், அதன் பிரிமியத் தொகையை பொறுத்து, நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். தமிழக அரசுக்கு இந்த ஆண்டு இறுதியில், ஒட்டுமொத்த கடன், 1 லட்சத்து, 18 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும். தாமதமின்றி கடன் திருப்பிச் செலுத்துதல், வட்டி செலுத்துதல் போன்றவற்றை, தமிழகம் சரியாக செய்து வருகிறது. இந்தியாவிலேயே குறைந்த கடன் பெற்றுள்ள மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. "டாஸ்மாக்' மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை மூலம் இந்த ஆண்டு, 10 ஆயிரத்து, 191 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கான விற்பனை வரியை பொறுத்தவரை, 7,755 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மதுபானங்கள் விற்பனை மூலம், அரசுக்கு, 17 ஆயிரத்து, 810 கோடி ரூபாய் கிடைக்கும். கடந்த ஆண்டு, 14 ஆயிரத்து, 243 கோடி கிடைத்தது.வணிகவரிகள் மூலம், கடந்த ஆண்டு, 28 ஆயிரத்து, 614 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த ஆண்டு, 37 ஆயிரத்து, 196 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் மற்றும் பதிவுகள் மூலம், கடந்த ஆண்டு, 4,650 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த ஆண்டு, 6,492 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வரிகள் மூலம், ஓராண்டுக்கு, 5,100 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். மின்வாரியத்தை பொறுத்தவரை, 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையும், 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திரண்ட நஷ்டமும் உள்ளது. அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்தி, குறைந்த விலைக்கு வாங்குதல், நீண்ட காலத்துக்கான ஒப்பந்தம் செய்தல், மின் திருட்டை தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம், நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மின்வாரியத்துக்கு, 2,196 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில், வீடு வழங்கும் திட்டத்தில், கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்ட வீடுகளுக்கு, மீதத் தொகை வழங்கப்படும். புதிய பசுமை வீடுகள் திட்டத்தில், தகுதியுள்ளவர்கள் சேர்க்கப்படுவர். தமிழக அரசின் மொத்த வருவாயில், 46 சதவீதம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கு வழங்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மூலம் விற்பனை வரியாக தமிழக அரசுக்கு, 7,867 கோடி ரூபாய் கிடைக்கும். கடந்த ஆண்டு, 6,840 கோடி ரூபாய் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...