|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 August, 2011

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை!

வளைபந்து விளையாட்டுக்கான இந்திய அணியின் கேப்டன்; உலகக் கோப்பை போட்டியில், நாட்டுக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தவர்; இன்று தோல் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வாணியம்பாடி அருகில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பத்மா. இவர்களது மகன் நாராயணசூர்யா, 33. இவருக்கு பள்ளிப் பருவத்தில் இருந்து வளைபந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். கடந்த 1990ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். எட்டாம் வகுப்பு வரை படித்த சூர்யா குடும்ப வறுமை காரணமாக, தனது கல்வியை கடந்த 93ம் ஆண்டில் நிறுத்திவிட்டார்.

அதே ஆண்டு, வளைபந்து விளையாட்டில் சப்-ஜூனியர் பிரிவில், தேசிய அளவில் தங்க மெடல் பெற்றார். கடந்த 97ம் ஆண்டு முதல் சீனியர் பிரிவிற்காக, விளையாட துவங்கினார். 2000ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை, தமிழக அணிக்காக தங்க மெடல் பெற்று கொடுத்துள்ளார். 2006ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றார். பிறகு இந்திய அணியில் கேப்டன் பதவியை ஏற்றார்.

கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி கேப்டன் என்ற பொறுப்புடன் விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றார். தற்போதும் இந்திய அணி கேப்டனாக திகழ்கிறார். உலகக்கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றதற்காக, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில், இவருக்கு எந்த அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. வறுமையில் வாடும் சூர்யா, தனது குடும்பத்தை நடத்த, வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் 140 ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்து வருகிறார்.

அவர் கூறியதாவது: குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக நான் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தினக்கூலிக்கு வேலை பார்த்து வருகிறேன். சிறு வயது முதல் வளைபந்து விளையாடுவதில், எனக்கு ஆர்வம் இருந்தது. கடந்த 93ம் ஆண்டு முதல் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளேன். இரண்டு முறை உலகளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளேன். தற்போது, இந்திய அணியின் கேப்டனாகவும் உள்ளேன். இந்த விளையாட்டிற்கு கல்விதுறையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தாலும், கிரிக்கெட், டென்னிஸ் போல மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு நாராயணசூர்யா கூறினார்.

அங்கீகாரம் கிடைக்குமா? : வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் விளையாட, பலரிடம் கையேந்தி ஸ்பான்சர் வாங்கி விளையாட வேண்டிய நிலையில்தான் தற்போதும் இவர் உள்ளார். பல பதக்கங்களை இவர் பெற்றாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மெடல்களும், பதக்கங்களும், சான்றிதழ்களுமே கிடைத்துள்ளன.

நாராயணசூர்யா கூறியதாவது: உலக கோப்பை போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளேன். அதற்கு பத்து லட்சம் ரூபாய் அரசு சார்பில் அளிப்பதாக கூறினர். வளைபந்து சங்கத்தின் மூலம், அதற்காக விண்ணப்பித்துள்ளேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. இந்த வளைபந்து விளையாட்டில் உலகளவில் பெருமை தேடிக்கொடுத்தாலும் இன்றளவில் நான் வறுமையில் வாடி வருகிறேன். எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு எனக்கும், இந்த விளையாட்டிற்கும் உரிய அங்கீகாரம் தரவேண்டும். மேலும், எனக்கு அரசு பணி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு நாராயணசூர்யா கூறுகிறார்.

நாராயணசூர்யாவின் மனைவி ரதிபிரியாவும் வளைபந்து வீராங்கனைதான். அவரும் தேசிய அளவிலான, தெற்காசிய போட்டிகளில் விளையாடி வருகிறார். எனவே, வளை பந்து விளையாட்டு இந்திய அணியின் கவுரவம் காப்பாற்றப்பட வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...