|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 August, 2011

கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது !

கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்து வருகிறது. இதில், பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "சொந்தமாக கார் வைத்திருப்பவர்களில் 15 சதவீதம் பேர், டீசல் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்த வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். ஐக்கிய ஜனதா தள தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்வீனருமான சரத் யாதவ் பேசுகையில், மானிய விலை டீசலை ஆடம்பர கார்கள் வைத்திருப்பவர்களுக்கும், டெலிகாம் டவர் கம்பெனிகளுக்கும், வர்த்தக மால்களுக்கும் வழங்குவது பற்றி அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,""உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறோம். கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்திவிட்டு எந்த வகையான நடைமுறையை கடைபிடிப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்படும்,'' என்றார். மத்திய அரசு, தற்போது டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6.08 மானியமாக வழங்கிவருகிறது. பெட்ரோல் விலையை, சந்தைவிலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. காஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை, அமைச்சர்கள் குழு முடிவு செய்தது. இழப்பை சரிக்கட்ட மானியம் வழங்கப்பட்டது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, கடந்த ஜூன் மாதம் டீசல் மற்றும் கெரசின், காஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இந்தியாவுக்கு, 75 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் தேவைப்படும் டீசலில், 10 சதவீதம் தொழில் துறைக்கும், 6 சதவீதம் ரயில்வேக்கும், 12 சதவீதம் விவசாயத் துறைக்கும், 15 சதவீதம் கார் உரிமையாளர்களுக்கும் போய் சேர்கிறது. இது தவிர, 8 சதவீதம் மின் சக்தி மற்றும் பஸ் போக்குவரத்திற்கு 12 சதவீதமும் பயன்படுகிறது.
சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், இன்னும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 1.22 லட்சம் கோடி பாக்கி உள்ளது.

லோக்சபா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்," டீசல் விலையை நிர்ணயிப்பதை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன' என்றார்.

மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், "" இந்தியாவில் டீசல் பயன்பாடு அதிகமாக உள்ளது. இருப்பினும் தயாரிப்பு செலவை விட குறைவாக கொடுக்கப்படுகிறது. மானிய விலையில் வழங்கப்படும் டீசலானது, லாரி மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுத்து அளிக்கப்படுகிறது. மேலும், விவசாய பயன்பாட்டிற்கும் அளிக்கப்படுகிறது. மானிய விலையில் விற்கப்படும் டீசல், பவர் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டிற்கு தவறாக உபயோக படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டீசல் விலையை, பயன்பாட்டிற்கு ஏற்ற இரட்டை விலை வைப்பதில் குழப்பம் உள்ளது. உண்மையானவர்களுக்கு மானியம், விவசாயிகள் மற்றும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு போய் சேரும் வகையில் அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு விரைவில் இறுதி வடிவம் கொடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...