|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 August, 2011

யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னர் சங்கிலியன் சிலை கையில் இருந்த வாள் அகற்றம்!

இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலையில் இருந்த வீரவாளை அகற்றியுள்ளது இலங்கை அரசு. இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலை யாழ்ப்பாணத்தில் நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. வீரவாளை உயர்த்தி பிடித்தப்படி சங்கிலியன் குதிரையில் பாய்ந்து செல்வது போன்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இறுதிக்கட்டப் போருக்கு பிறகு தமிழர்கள் வாழும் வடக்கு, மற்றும் கிழக்கு பகுதிகள் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள மன்னர் சங்கிலியன் சிலை அகற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தற்போது அந்த சிலையை அதே இடத்தில் வைத்துள்ளனர்.

இதை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். ஆனால், சங்கிலியனின் சிலையின் வலது கையில் விண்ணை நோக்கி உயர்த்தி பிடித்து இருந்த வீரவாள் இல்லை. அதை இலங்கை அரசு அகற்றியுள்ளது.

மேலும் அவரது வலது கை மடக்கி வைக்கப்பட்ட நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் சரணடைவது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை. இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கிலியன் கையில் இருந்த வீரவாளைக் கண்டு பயந்த இலங்கை ராணுவம், சிங்கள அரசியல்வாதிகள், மந்திரிகள், யாழ்ப்பாண நகரபிதா, வட மாகாண அரசாங்க அதிபர், அமைச்சர் டக்ளஸ், அந்த வீரவாளை எடுத்து விட்டு புதிய சங்கிலியன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்கிறார்கள்.விடுதலை என்பது தமிழரின் ரத்தத்தோடு சேர்ந்தது, அந்த வாளை எடுத்து விட்டால், தமிழர்கள் சுதந்திரம், விடுதலைப் பாதையை மறந்து விடுவார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

கடந்த தேர்தலில் பல இன்னலுக்கு இடையேயும் திருக்கோவிலில் இருந்து வல்வெட்டித்துறை வரை தமிழன் என்று கூறிக்கொண்டு தமிழ் இனத்தின் அழிவுக்கு துணையாக இருந்த டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்களை தூக்கி எறிந்து விட்டு, அவர்களுடன் இருந்த சிங்கள அரசியல்வாதிகளையும் தூக்கி எறிந்து விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எமது மக்கள் வாக்களித்து இருந்தார்கள். அந்த வாக்களிப்பு தமிழ் மக்கள் இன்றும் தமிழரின் வாழ்வு தமிழ் மக்களின் கையில் என்று வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள்.

விடுதலைதான் தமிழ் மக்கள் அமைதியாக சுதந்திரமாக வாழ ஒரே முடிவு என்று சிந்தித்து அவர்கள் வாழ்கிறார்கள். இன்று சங்கிலியன் வாளை அப்புறப்படுத்தலாம், பண்டாரவன்னியன் நினைவுச் சின்னத்தை அப்புறப்படுத்தலாம், எமது மாவீரர் உறங்கும் நினைவாலயங்கள் மேல் ராணுவ முகாம் அமைக்கலாம்,

சிங்கள ராணுவ அகங்கார வெற்றிச்சின்னங்களைக் கட்டலாம், புத்த விகாரைகள் கட்டலாம், ஆனால் அந்த கல்லறைகள் ஒவ்வொரு தாயின் வீரக்கண்ணீரும், மாவீரரின் வீர ரத்தமும் சிந்திய மண், தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக காலம் காலமாக விடுதலைக்கு செய்த தியாகம், அவர்கள் உறங்கு நிலையில் இருந்து எழுந்து வரும்போது தமிழீழம் பிறக்கும். சங்கிலியன் சிலையில் வாளை அகற்றியது சிங்களவன் தமிழ் மேல் இருக்கும் பயத்தைதான் காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...