|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 October, 2011

2ஜி' ஊழலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது சுப்ரீம் கோர்ட்!


ஏல முறை மூலம், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் வாயிலாக தெரிவித்த யோசனை, புறக்கணிக்கப்பட்டது ஏன்? பிரதமர் எழுதிய கடிதத்தின் மீது, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த ஊழலை தடுத்திருக்கலாமே' என, மத்திய அரசிடம், சுப்ரீம் கோர்ட் நேற்று கேள்வி எழுப்பியது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் கோயங்கா, சஞ்சய் சந்திரா ஆகியோரின் ஜாமின் மனுக்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.டாட்டு ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. 

அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து, நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் தெரிவித்ததாவது: சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், 2007 நவம்பர் 2ம் தேதி மிக முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த தேதியைப் பற்றி அனைவருக்கும் தெரியும்; சி.பி.ஐ.,க்கும் தெரியும். ஏலத்தின் மூலம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அந்த நாளில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், பிரதமரின் ஆலோசனையை அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஏற்க மறுத்துள்ளார். நிதி அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமரின் ஆலோசனையைப் புறக்கணித்து, ஏல முறையில் இல்லாமல், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்போதே, உரிய நேரத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்திருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்காமல் தடுத்திருக்க முடியும். அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது, அரசுக்கு அப்போது தெரியவில்லையா? 2008 ஜனவரி 9ல் நடக்கவிருந்த தொலைத்தொடர்பு ஆணையத்தின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஏல முறை தொடர்பான கொள்கையைப் பின்பற்றாமல், அப்போதைய அமைச்சர் ராஜா, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக 122 அனுமதி கடிதங்களை வழங்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக புகார் கூறப்பட்டதில் துவங்கி, கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இந்த வழக்கு தொடர்பான நடைமுறைகளை முடிப்பதில் சி.பி.ஐ., காலதாமதம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் இவர்கள் (ஜாமின் கோரியவர்கள்) சிறைக் கம்பிகளுக்குள் இருக்கப் போகின்றனர் என்பது தான் எங்கள் கேள்வி. இன்னும் விசாரணையை துவங்கவில்லையே. இது முடிவடைவதற்கு ஏழு ஆண்டுகள் ஆகுமா? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

புதிய குற்றச்சாட்டு - கனிமொழி எதிர்ப்பு : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அல்தாப் அகமது கூறியதாவது: இந்த வழக்கில், நம்பிக்கை மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை, எங்கள் கட்சிக்காரர்கள் மீது சி.பி.ஐ., சுமத்தியுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, இவர்கள் மீது, நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை கூற முடியாது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லாதபோதும், அரசு ஊழியர்களாக இல்லாதபோதும், இவர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை கூற முடியாது.
இவ்வாறு அல்தாப் அகமது கூறினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சினியுக் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கரீம் மொரானி, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா ஆகியோரது வழக்கறிஞர்களும் நேற்று வாதாடினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...