|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 October, 2011

ஃபார்மசிஸ்ட் படிப்பின் முக்கியத்துவம்!


மருத்துவ சுற்றுலாவில் இந்தியா பிரதான இடம் வகிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சிறு நகரங்களில் கூட பல்நோக்கு மருத்துவ மையங்கள் வந்து விட்டன. கிராமங்களுக்கு மிக அருகில் மருத்துவமனைகளும், ஏராளமான மருந்து விற்பனைக் கடைகளும் தோன்றியிருக்கின்றன. அதிக மக்கள்தொகை, அதிகரித்திருக்கும் உடல் நலம் பேணுதல் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றால், மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. மருத்துவர்களுக்கான தேவை மட்டுமின்றி மருத்துவம் சார்ந்த பிற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் மருந்தாளுனர் பணியிடமும் ஒன்று.

பிளஸ் 2வில் கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் படித்திருக்க வேண்டும். இத்துறையில் டிப்ளமோ(டிஃபார்ம்) மற்றும் இளநிலைப் படிப்புகள்(பிஃபார்ம்) வழங்கப்படுகின்றன. பிஃபார்ம் படிப்புக்கு மாநில அளவிலான நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மருந்தாளுனர் பணி என்பது டாக்டரின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை தயாரித்தல், மருந்துக் கலவைகளை உருவாக்குதல், மாத்திரைகள், ஊசிமூலம் செலுத்தப்படும் மருந்துகள் தயாரித்தல், ஆயின்மென்ட்கள், மருந்துப்பொடிகள் தயார்செய்தல் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கியது.

மருந்துகளைப் பயன்படுத்தும் முறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கத் தெரிய வேண்டும். வேறுபட்ட மருந்துகளின் குணம் பற்றி, டாக்டருக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டி இருக்கும்.  மருந்துக்கடைகள் பற்றிய அரசு ஆணைகள், நெறிமுறைகள் பற்றிய ஆவணங்களை முறையாக பரமாரித்து வர வேண்டும். மருத்துவமனைகளில் பணிபுரியும் மருந்தாளுனருக்கு, டாக்டரால் பரிந்துரைக்கப்படும்; வெளிச்சந்தையில் எளிதில் கிடைக்காத சில மருந்துகளை கலவைகளின் மூலம் உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும். சில அவசர காலகட்டத்தில் டாக்டர் அருகில் இல்லாத போது, நரம்பு வழி மருந்து செலுத்துதல் போன்ற முதலுதவி செய்ய வேண்டும்.

சில்லறை விற்பனைக் கடைகளில் மருந்துகளை விற்பனை செய்பவராகவும், சொந்தமாக கடை நடத்துபவராகவும் இப்படிப்பு உறுதுணையாக இருக்கும்.
இதில் உயர்படிப்புகள் படிப்பதன் மூலம், மருந்துகளின் தரம் பற்றி ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடலாம். மருந்து ஆய்வாளர் பணியிடம், ஆய்வகங்களில் பரிசோதகர், பயிற்றுனர் போன்ற பணிகளையும் செய்யலாம். முதுநிலை, பிஎச்.டி., படிப்புகளும் இதில் உள்ளன. கல்லூரிகளில் விரிவுரையாளராகச் சேரலாம்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய, விற்பனைப் பிரதிநிதிகளை நியமனம் செய்கின்றனர். மெடிக்கல் ரெப் எனும் இப்பணியிடத்துக்கு டிஃபார்ம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தகுதி கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கலந்துரையாடும் திறனும், மொழிவளமையும் மிக்கவர்கள் மெடிக்கல் ரெப் பணியிடத்தில் கணிசமான வருவாய் ஈட்ட  முடியும்.

அரசு மற்றும் தனியார் துறையில் ஏராளமான பணியிடங்கள் உள்ளன. அரசுத்துறையில் உள்ள சில பணியிடங்கள் மாநில அரசின் தேர்வாணையத்துறையால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. சில பணியிடங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களின் மூலம் அறியலாம். விருப்பமுள்ளவர்கள் சொந்தமாக சில்லறை விற்பனைக் கடைகளை துவக்கி தொழில்முனைவோர் ஆகலாம். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இதற்கான கல்லூரிகள் உள்ளன. இப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகவலுக்கு www.pci.nic.in  என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...