|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 October, 2011

தமிழ் பெண்ணிற்கு சிறந்த பெண் சட்ட வல்லுனர் விருது!


நியூசெளத் வேல்ஸ் : ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் சட்ட வல்லுனர் அமைப்பும், பெண் சட்ட வல்லுனர் சங்கமும் இணைந்து வழங்கும் சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது 2011க்காக வழக்கறிஞர் டாக்டர்.சந்திரிகா சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞருக்கு இவ்விருது பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். டாக்டர் சந்திரிகா சுப்ரமணியன், 2009 ஆண்டில் இது போலவே சிறந்த சட்ட சேவைக்கான ஜஸ்டிஸ் விருதுக்குத் தெரிவாகிய முத‌ல் தமிழ்ப் பெண் ஆவார். டாக்டர்.சந்திரிகா சுப்ரமணியன் பிளக்டவுன் சிட் வெஸ்ட் பல்லின பல் கலாச்சார சேவை நிலையத்தில் இலவச சட்ட சேவையை வழங்குகிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் பத்திரிகையாளராகவும், ஊடகத்துறையில் ஆய்வாளராகவும், சென்னைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணி செய்தவர் ஆவார். 1989ம் ஆண்டு இவர் எழுதிய 'மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்' என்ற நூலுக்குத் தமிழக அரசு விருது கிடைத்துள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1997ம் ஆண்டு சிட்னியில் குடியேறிய பின்னர், பிற நாடுகளில் இருந்து அங்கு குடியேறியவர்களுக்காக சேவை நிலையங்களில் பணி புரிந்தார். பின் மைக்ரோசாஃப்ட் அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் மென் பொருள் பணி பயிற்சியாளராகவும், இரட்டை கலாச்சாரத் துறையில் சிறப்பு பயிற்சியாளராகவும் பணி புரிந்து பின் சமூகத்தில் பெண் பழக்கறிஞர் தேவையை உணர்ந்து சட்டம் பயின்றார். தற்போது பரமற்றாவில் சக்ஸஸ் லாயர்ஸ் அண்ட் பாரிஸ்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரிகளில் சட்ட ஆசிரியராகவும் பணி புரிகிறார். இவரது சோமா இலவச சட்ட சேவை அமைப்பு மூலம் வாரந்தோறும் இலவச சட்டச் சேவையை மேற்கு சிட்னியில் வாழும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்காக செய்து வருகிறார். பெண்களுக்கு சட்டத்துறையின் மூலம் சிறந்த சேவை, பயிற்சி மற்றும் உதவிகளை வழ‌ங்கும் தனி திறமைக்காக இவ்விருது இவருக்கு வழங்கப்படுகிறது. அவரது முயற்சிகள் தமிழர்களுக்கெல்லாம் முன்னோடி ஆகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...