|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 November, 2011

குமரிக்கு இன்று 56வது பிறந்த நாள்...!


குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவு ஸ்தூபி புதுக்கடையில் உள்ளது. தமிழகத்தின் தென் எல்லை பகுதியாக விளங்குகிறது எழில் கொஞ்சும் குமரி மாவட்டம். திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த இம்மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த ஒன்பது தாலுகாக்களையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பதற்காக நாகர்கோவிலில் "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்ற அமைப்பு 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தலைவராக சாம் டானியேல் பொறுப்பேற்றார். அதன் பின்னர் மார்ஷல் நேசமணி இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 


திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்த போது இதனை ஒடுக்க அரசு அடக்குமுறையை கையாண்டது. இந்நிலையில் 1954ம் ஆண்டு உச்சகட்ட போராட்டம் நடந்தது. இதனையடுத்து தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புதுக்கடையில் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இச்சம்பவத்தில் அருளப்பநாடார், முத்துசுவாமி, செல்லப்பாபிள்ளை, பீர்முகமது ஆகியோர் உயிரிழந்தனர். போராட்டம் ஓயவில்லை என்பதை உணர்ந்த அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை தாலுகாக்களை 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழகத்துடன் இணைத்தது. அன்று தமிழக முதல்வராக இருந்த காமராஜர் தலைமையில் நாகர்கோவிலில் எஸ்.எல்.பி., மேல்நிலைப்பள்ளியில் இதற்கான விழா நடந்தது. சாம் டானியேல், மார்ஷல் நேசமணி, குஞ்சன்நாடார், சிதம்பரநாதன், ரசாக், நூர்முகமது, சைமன், காந்திராமன், மணி, தாணுலிங்கநாடார், பொன்னப்பநாடார், வில்லியம், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்வாறு போராட்ட களங்கள் பல கண்டு, பலரை தியாகம் செய்து தாய் தமிழகத்துடன் இணைந்தது குமரி மாவட்டம். குமரிக்கு இன்று 56வது பிறந்த நாள். வளர்ச்சி பாதையில் குமரி மாவட்டம் சென்று கொண்டிருந்தாலும் தன்னிறைவடைய இன்னும் ஏராளம் செய்ய வேண்டியுள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...