|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 November, 2011

பரிதியைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகம் தயார்!

திமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மேலும் வலுவடையப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. பரிதி இளம்வழுதியைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் கட்சியில் புதிய புயலைக் கிளப்பத் தயாராவதாக கூறப்படுகிறது. பரிதி இளம்வழுதியைப் போன்ற கட்சி விசுவாசிகளுக்கு, தீவிர உழைப்பாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கட்சித் தலைவர் கருணாநிதியிடம், வீரபாண்டி ஆறுமுகம் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக முன்னணித் தளபதிகளில் ஒருவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் ஆரம்பத்திலிருந்தே கருணாநிதி கோஷ்டியில்தான் நீடித்து வருகிறார். அழகிரி பக்கமோ, ஸ்டாலின் பக்கமோ இவர் சாய்ந்தது இல்லை. இருப்பினும் சமீபத்தில் அழகிரியா, ஸ்டாலினா என்ற மல்யுத்தம் திமுகவில் தொடங்கியபோது அழகிரி பக்கம் இவர் சாய்ந்தார். தொடர்ந்து அதே பக்கத்திலேயே இருந்து வருகிறார். இதனால் ஸ்டாலின் தரப்பு சற்றே அப்செட்டாகியுள்ளது. இந்த நிலையில் பரிதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார் வீரபாண்டியார். இது திமுக உட்கட்சிப் பூசலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை வலுப்படுத்துவது போல சேலத்தில் நடந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வீரபாண்டியாரின் பேச்சு அமைந்துள்ளது.

அக்கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடித்து கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் நீக்கப்படுவார்கள் என்று இந்தக் கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் பேசியுள்ளார். தேர்தலில் திமுக வேட்பாளர்களை அதாவது தனது ஆதரவாளர்களைத் தோற்கடித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்குச் சொல்லாமல் சொல்லியுள்ளார் வீரபாண்டியார் எனக் கருதப்படுகிறது. ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரளயத்தை ஏற்படுத்த வீரபாண்டியார் தயங்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சென்னை வந்த வீரபாண்டியார் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேசியுள்ளார். அப்போது ஸ்டாலின் ஆதரவாளரான திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட சேலம் மாவட்ட நிர்வாகிகள் மீது புகார்ப் பட்டியலைக் கொடுத்துள்ளார்.

தனது பேச்சை ராஜேந்திரன் மதிப்பதில்லை என்றும், ஏதாவது கேட்டால் ஸ்டாலின் சொன்னதால் செய்கிறேன் என்று கூறி விடுவதாகவும் கூறினாராம் வீரபாண்டியார். இதற்கு கருணாநிதி என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.  மேலும் தனது சந்திப்பின்போது பரிதிக்கு ஆதரவாகவும் பேசி விட்டு வந்துள்ளார் வீரபாண்டியார். கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை நீக்கத்தான் பரிதி கூறினார்.இதில் தவறு என்ன உள்ளது. கட்சிக்கு விசுவாசமான பரிதியைப் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்றும் அவர் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...