|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 November, 2011

குழந்தைகளுக்கு ஒரே ஊசியில் 5 தடுப்பு மருந்து!


ஒரே ஊசியில் 5 தடுப்பு மருந்துகளைக் கொண்ட, "பென்டா வேலன்ட்' தடுப்பூசி திட்டம், தமிழகத்தில் டிசம்பர் 17ல் துவக்கப்படும்,'' என, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறினார். ரணஜன்னி, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் ஆகிய 3 நோய்களுக்கும், "டிபிடி' முத்தடுப்பு தடுப்பூசி போடப்படும். இந்த மூன்று தடுப்பு மருந்துகளோடு, "ஹெப்படைடீஸ் பி' மஞ்சள் காமாலை தடுப்பு மருந்து, மூளைக் காய்ச்சலைத் தடுக்கும், "ஹிப்' தடுப்பு மருந்து ஆகிய 5 தடுப்பு மருந்துகளையும், ஒரே தடுப்பூசியில் (பென்டா வேலன்ட்) போடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பு மருந்துகளையும் தனித்தனியாக போடும் போது, குழந்தைகளை அதிக முறை ஊசியால் குத்தி, துன்புறுத்த வேண்டியிருக்கும். மேலும், ஒவ்வொரு முறை தடுப்பூசி போடும் போது, ஓரிரு நாட்கள் காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆனால், 5 தடுப்பு மருந்துகளையும் ஒரே ஊசியில் போடுவதால், குழந்தைகளுக்கு தொந்தரவுகள் குறைவு என்பதால், தமிழக சுகாதாரத் துறை பென்டா வேலன்ட் தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தது.

ஆனால், சில குழந்தை மருத்துவர்கள் இதுபற்றி கூறும் போது, ""பென்டா வேலன்ட் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்காது. எல்லா தடுப்பு மருந்துகளையும் ஒரே ஊசியில் கொடுப்பதால், மருந்தின் வீரியம் குறைய வாய்ப்புள்ளது. மேலும், பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்துண்டு,'' என, தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், பென்டா வேலன்ட் தடுப்பூசி சிறப்பானது; பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டதால் தமிழகம், கேரளத்தில் பென்டா வேலன்ட் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறும் போது, ""பென்டா வேலன்ட் தடுப்பூசி திட்டம் நவம்பரில் துவங்குவதாக இருந்தது. சில நடைமுறை காரணங்களால், வரும் டிசம்பர் 17ல் துவக்கப்படும்,'' என்றார். சுகாதாரத் துறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறும் போது,""சில மாவட்டங்களில் மட்டும் இப்போது சோதனை அடிப்படையில் "பென்டா வேலன்ட்' தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு மட்டும், இத்தடுப்பூசி போடப்படுகிறது. தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில், செவிலியர்களுக்கு இப்போது தான் பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என்றார். கிராமப்புற செவிலியர்கள், கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, தடுப்பூசி போட உள்ளனர். பென்டா வேலன்ட் தடுப்பூசி போட, இவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...