|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 November, 2011

மக்கள் காதுகளில் ஜெ. இனியும் பூ சுத்த முடியாது- கருணாநிதி!


 3 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியிலேயே அச்சடிக்கப்பட்டு, சட்டசபையிலேயே படிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட திட்டங்களையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, இன்றைய சீர்கேடுகளுக்கெல்லாம் தி.மு.க. அரசுதான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுவது நியாயம் தானா? என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று அறிவித்து விட்டு, இவ்வாறு செய்வதற்கு இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க.தான் காரணம் என்றும், மின் வாரியம் உள்பட அனைத்துத் துறைகளின் சீர்கேடுகளுக்கும் தி.மு.க. ஆட்சிதான் பொறுப்பு என்றும் பழியைத் தூக்கி தி.மு.க. மீது சுமத்தி அறிக்கை விட்டிருக்கிறார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

இந்த ஆண்டு மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைகளை பெற்று பேரவையில் 4-8-2011 அன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், பத்தி 6: மின் ஆளுகை முயற்சிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றும், பத்தி 50: உலக அளவில் தமிழ்நாடு உற்பத்தி சார்ந்த தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக கருதப்படுகிறது என்றும், பத்தி 58: நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிலம் ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனம் 25 இடங்களில் 2,256 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது என்றும், பத்தி 68: 2011-2012 ஆம் ஆண்டில் புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தித் திறன் 3,280 மெகாவாட் ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது என்றும் எழுதப்பட்டு, பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தால் படிக்கப்பட்டது.

அதிலே கூறப்பட்ட 3,280 மெகாவாட் மின்சாரம் கூட கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டங்களால் கிடைக்க கூடியதே தவிர, அ.தி. மு.க. ஆட்சியின் 3 மாத காலங்களிலே உற்பத்தியானதல்லவே. எனவே 3 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியிலேயே அச்சடிக்கப்பட்டு, அவையில் படிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட திட்டங்களையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, இன்றைய சீர்கேடுகளுக்கெல்லாம் தி.மு.க. அரசுதான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுவது நியாயம் தானா? ஏடுகள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

அது மாத்திரமல்ல, 4-8-2011 அன்று பன்னீர்செல்வம் படித்த அதே நிதி நிலை அறிக்கையில் மின்சாரத்துறை வளர்ச்சியடைய பல்முனை உத்திகளை அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வருவதாகவும், மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்கவும், புதிய மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியதோடு, மின் வெட்டு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் இன்றைய நிலை என்ன?

2 மணி நேரமாக தி.மு.க. ஆட்சியில் இருந்த மின்வெட்டு, தற்போது 5 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த புதிய மின் உற்பத்தித் திட்டங்களும் தொடங்கப்படவும் இல்லை. இந்த நிலையில் அம்மையார் ஜெயலலிதா, தி.மு.க. அரசுதான் சீர் கேடுகளுக்கெல்லாம் காரணம் என்றும், நான் நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உண்மையை நன்றாகவே உணரத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்கள் காதுகளில் இனி பூ சுற்ற முடியாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...