|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 November, 2011

தியாகமின்றி வெற்றி இல்லை...!


இந்த பூமியில் மானுட வாழ்க்கை துவங்கியதிலிருந்து, இறைவன் தன் தூதர்களை உலகிற்கு அனுப்பி வந்தான்.ஆதம் (அலை) நபியிலிருந்து தொடங்கி, முஹம்மது நபி (ஸல்) உடன் அது முடிகிறது. இறைவனால் மனிதனுக்கு சத்திய நெறியை முழுமையாக போதிக்க, இறைவனுடைய கட்டளைகள்படி மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை சிறக்க, அந்த நபிமார்கள் பாடுபட்டனர்.அதற்காக அவர்கள் சந்தித்த சிரமங்கள், சிந்திய ரத்தங்கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...அப்படி இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும் இன்றைய நாளை உலகம் முழுக்க இருக்கும் அத்தனை முஸ்லிம்களும் கடைபிடிக்கின்றனர். அதை ஒரு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.இப்ராஹிம் நபிக்கு, ஸாரா மற்றும் ஹாஜிரா என இரண்டு மனைவியர் இருந்தனர்.அவருக்கு நீண்டநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவருக்கு 85 வயது இருக்கும்போது, ஹாஜிரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது.அவருடைய பெயர் இஸ்மாயில் நபி.அதற்குப் பின் சில ஆண்டுகள் கழித்து, ஸாரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவருடைய பெயர் இஸ்ஹாக் நபி.இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும், இறுதி மாதமான துல்ஹஜ் மாதமும், மாபெரும் தியாகங்களை உள்ளடக்கிய மாதங்களாகும்.கருணைமிக்க ரஹ்மானாகிய அல்லாஹ், ஒருமுறை நபி இப்ராஹிம் (அலை) உடைய கனவில் தோன்றி, "உம்முடைய மகன் இஸ்மாயிலை என் பெயரால் அறுத்து பலி இடு' என்று கட்டளையிட்டார்.இறைத்தூதர்களுக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல; அவை கடவுளின் கடிதங்கள். உலகத்தையே படைத்து பரிபாலிக்கும் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற, இப்ராஹிம் நபி (அலை) தன் கனவை பற்றி தன்னுடைய மகன் இஸ்மாயிலிடம் கூறுகிறார்.

அதற்கு அந்த பிள்ளை, ""தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன்...'' எனக் கூறுகிறார்.என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்...பிறகு, இப்ராஹிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்தில், பிள்ளைப்பாசம் தடுக்காமலிருக்க, தனது கண்களை துணியால் கட்டிக்கொண்டு, மகனது கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, "அல்லாஹ் மிகப்பெரியவன்' எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் காண்கிறார்.""எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே... அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே... அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி,'' என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்) "இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள் ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்' என்று சொன்னார்.

"நீங்கள் அறுத்த ஆட்டின் ரத்தமோ, இறைச்சியோ என்னை வந்து அடைவதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்களில் உள்ள எண்ணங்களை நான் நன்கு அறிந்தவனாக இருக்கிறேன்' என, இறைவன் கூறுகிறான்.குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. குர்பானி கொடுக்கும் நாளில், குர்பானி கொடுப்பதை விட, அல்லாஹ் இடத்தில் வேறு சிறந்த வணக்கம் எதுவும் கிடையாது. குர்பானிக்காக பிராணியை அறுக்கும்போது, அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னாலேயே, அல்லாஹ் இடத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகி விடுகிறது.எனவே, மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார். ஒரு தடவை நாயகத்திடம் தோழர்கள், "குர்பானி என்றால் என்ன?' என்று வினவியதற்கு, ""அது, உங்களின் தந்தையாகிய நபி இப்ராஹிம் (அலை) உடைய வழிமுறை,'' என நாயகம் (ஸல்) பதிலளித்தார்.

அதற்கு அந்த தோழர்கள், "அதனால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது' எனக் கேட்டனர்."குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும், நன்மை இருக்கிறது' என, நாயகம் (ஸல்) பதிலளித்தார்.குர்பானி, குறிப்பாக மூன்று நாட்களில் மட்டுமே கொடுக்க வேண்டும். அவை துல்ஹஜ் மாதத்தின் 10, 11 மற்றும் 12ம் தேதிகளில், எப்பொழுது நாடுகிறோமோ அப்போது கொடுக்கலாம். ஆனால், துல்ஹஜ் மாதத்தில் 10வது நாளில் குர்பானி கொடுப்பது மிகச் சிறந்தது.குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் கறியை, மூன்று பங்காக பிரிக்க வேண்டும். ஒரு பங்கை தன் குடும்பத்திற்காக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பங்கை, நண்பர்கள், உறவினர்களுக்கு பங்கிட்டுத் தரவேண்டும். மூன்றாவது பங்கை, ஏழை, எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு தரவேண்டும்.இப்ராஹிம் நபி (அலை) கட்டிய இறை இல்லாமே மக்கா வாகும் அங்கு துல்ஹஜ் மாதத்தில் செல்வது ஹஜ் என்றும், மற்ற காலங்களில் செய்வது உம்ரா என்றும் சொல்வார்கள்.ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஐந்து முக்கிய கடமைகளை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அவை: கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகும்.

ஹஜ் எனும் புனிதப் பயணம் வசதிபடைத்த அனைவர் மீதும் கட்டாய கடமையாகும். இந்த பள்ளிவாசலை புதுப்பித்து, அங்கு தொழுகையையும், மார்க்க சொற்பொழிவையும் நடைமுறைப்படுத்தியவர் முஹம்மத் நபி (ஸல்)ஹஜ் காலங்களில் உலகத்தில் அனைத்து பகுதிகளிலிருந்தும், இனம், நிறம், மொழி, தேசம் என்ற எந்த பேதமுமின்றி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற, அங்கே கூடுவது கண்கொள்ளாத காட்சி..."லப்பைக் அல்லாஹகம்மா லப்பைக், லப்பைக் லாஷரிகலக லப்பைக் இன்னல் ஹம்தவல் நியமத லகவல்முல்க் லாஷரீகலக்...'"இதோ வந்துவிட்டோம் இறைவா... உன் அழைப்பை ஏற்று உன் இடத்திற்கு இதோ வந்து விட்டோம் இறைவா... உன் அருட்கொடைகளுக்கு நன்றி கூற' என்று, புனிதப் பயணம் மேற்கொள்பவர்களின் நா அசைந்து கொண்டிருக்கும்!இப்ராஹிம் நபி (அலை)யின் வாழ்க்கை தியாகமின்றி வெற்றி இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.நாம் எதை தியாகம் செய்வது? எப்படி வெற்றி அடைவது?

இந்த உலக வாழ்க்கையை இறைவன் எந்த ஒரு அர்த்தமும் இல்லாமல் வெறுமனே படைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.நமக்கு சிந்திக்கின்ற ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கிறான். இறைவனுடைய படைப்பிலேயே ஆகச் சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால் படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே நாம் பரிகாசம் செய்வது போலாகும்.நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். நம் மனதில் மறைந்து கிடக்கும் நானே மேலானவன் என்கிற மமதையை, மாடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். செல்வம், அகம்பாவம், ஆடம்பரம் இவற்றின் ஆணவக் கூடுகளை ஒட்டகங்களுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.இத்தியாகத் திருநாளில் எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம்... இவ்வுலகை படைத்து பரிபாலிப்பவனே... அளவற்ற அருள் பொழிபவனே... நிகரற்ற அன்புடையோனே... தீர்ப்பு நாளின் அதிபதியே... உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக. அன்பு, பாசம், பரிசு, சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக ஆமீன்!நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமை, கல்லாமை, இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, இந்த நல்ல நாளில் மட்டுமன்றி இனிவரும் நாட்களிலும் எல்லாருக்கும் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம். எல்லாம் வல்ல இறைவனே.. உன்னிடமே உதவி கேட்கிறோம். ஆமீன்!நன்றியும், கருணையும், நட்பும், உதவும் மனோபாவமும் நம்மனங்களில் சுரக்கச் செய்வாயாக அல்லாஹ்...ஆமீன்...யா ரப்புல் ஆலமீன்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...