|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 December, 2011

"முல்லைப்பெரியாறு பிரச்னையில் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத்தயார். தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் விஜயகாந்த்!


முல்லைப்பெரியாறு பிரச்னையில், மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்து, நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத்தயார். அதே வேளை தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்று தேனியில் விஜயகாந்த் ஆவேசமாக பேசினார்.முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து தேனியில் தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில துணைச்செயலாளர்கள் இளங்கோவன், தேனி முருகேசன், ஆஸ்டின், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், ராஜா, மாவட்ட செயலாளர்கள் தினேஷ், ராஜா, தமிழ்முருகன், பாலச்சந்தர், அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். விஜயகாந்த் பேசியதாவது: நான் முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை குடித்து வளர்ந்தவன். அதனால் தான் இப்பிரச்னையில் உணர்வுடன் போராடுகிறேன். முல்லை பெரியாறு அணை பிரச்னையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளா தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. அணை பலப்படுத்தப்பட்டு விட்டதால், நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் கேரளா கண்டுகொள்ளவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்த மத்திய அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போது ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கருணாநிதியும், நடவடிக்கை எடுக்கவில்லை.


எல்லா பிரச்னைகளிலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒன்று தான். அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. நான் மக்கள் மீது அக்கறை கொண்டவன் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறேன். இப்பிரச்னையில் கேரள அரசு தூங்குவதை போல் நடிக்கிறது.நான் மக்கள் நலனின் அக்கறை உள்ளவன். இந்த விஷயத்தில் நான் அரசியல் நடத்த விரும்பவில்லை.எவ்வளவோ கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும் முல்லை பெரியாறு அணை பிரச்னையில் நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.இப்பிரச்னையில் மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது என கருணாநிதியே கூறியிருக்கிறார். இதை தெரிந்து கொள்ள அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் அடாவடியினை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி செயல்பட அறிவுறுத்த வேண்டும். அணை பாதுகாப்பிற்கு மத்திய படையையோ, ராணுவத்தையோ நிறுத்த வேண்டும். இந்திய நதிகள் முழுவதையும் தேசியமயமாக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்னை தீரும்.



கேரளத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி பேச்சுவார்த்தை என்ற பெயரில் இனியும் ஏமாறக்கூடாது.கேரளமும், கர்நாடகமும் தமிழகத்தை மழைக்காலத்தில் மட்டும் நீர் வழிந்து செல்லும் வடிகாலாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அமைச்சர் பதவியை வாழப்பாடி ராமமூர்த்தி ராஜினாமா செய்ததைப்போல், பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்.கருணாநிதி நாங்கள் முடிவெடுப்போம் என்கிறார். தி.மு.க., இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்னைக்காக நான் என் பதவியை ராஜினாமா செய்ய தயார். எனது கட்சி எம்.எல்.ஏ.,க்களும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்,என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...