|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 December, 2011

நதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தேசியமயமாக்கி, நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும் அப்துல்கலாம்!


நதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தேசியமயமாக்கி, நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும்'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசனை தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், வேளாண்மை கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.  முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைத்து பேசியதாவது: நாட்டில் பல்வேறு காரணங்களால் விவசாய நிலங்களின் அளவு குறைந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு உற்பத்தி அதிகம் தேவைப்படுகிறது. குறைந்த அளவு நிலத்தில், குறைந்த அளவு தண்ணீரில், குறைந்த அளவு மனித சக்தியை வைத்து, அதிகளவில் உணவு உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் நீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. தற்போது 1,500 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் தண்ணீரில் 300 டி.எம்.சி., தண்ணீர் நமக்கு கிடைத்தால் கூட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். நீர் பிரச்னை என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் உள்ளது. அமெரிக்காவில் கூட நதிநீர் பிரச்னை இருந்தது. அங்கு நதிகள் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டதால், 31 மாநிலங்கள் பயன் அடைகிறது. அதுபோல ஒரு நிலை நம் நாட்டிலும் உருவாக வேண்டும். நதிநீர் பிரச்னையால் உள்நாட்டு போர் உருவாகிவிடக் கூடாது. நதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தேசியமயமாக்கப்பட வேண்டும். பெரிய அணைகளையும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் ராணுவம், கப்பல் படை போன்ற அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து மாநில நதிகளையும் இணைக்க வேண்டும். வறண்ட பூமி பகுதிகளில் புதிய கால்வாய்களை வெட்டி விட வேண்டும். எல்லா பகுதிகளிலும் நீர் இருக்கும் போது, விவசாயத்தை தாராளமாக செய்ய முடியும். எந்த இடத்திலும் தேவையில்லாத நிலம் இருக்காது. தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய மின் தொகுப்பு இருப்பது போல, தேசிய நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும். அதன் மூலம் மாநில அரசுக்கு தேவையான நீரை மத்திய அரசு பிரித்து கொடுக்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்னை உள்ளிட்ட எந்த நீர் பிரச்னையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.

குஜராத்தில் விவசாயம் தங்கு தடையின்றி நடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்கிறது. விஞ்ஞான பூர்வமாக விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் அம்மாநில விவசாய உற்பத்தியில் 9 சதவீதம் வளர்ச்சி என்ற நிலையில் உள்ளது. ஆனால், தேசிய அளவில் விவசாய வளர்ச்சி 2 சதவீதம் தான் உள்ளது. பீகாரிலும் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்திலும் விவசாய உற்பத்தி அதிகரிக்க வேண்டும். விவசாய தகவல் மையம் டில்லியில் உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், விவசாய தகவல் மையத்தை ஊராட்சிகள் அளவில் துவக்க வேண்டும்.

தரமான விதை, தரமான உரம், வங்கி கடன், எந்தெந்த விவசாயத்திற்கு எந்தெந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அந்த மையத்தில் இடம் பெற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையால் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதிகமான உற்பத்தி கிடைத்த பின் அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில், விவசாய சம்பந்தப்பட்ட பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். விவசாயிகள் வங்கி கடனை கேட்டதும் வழங்க வேண்டும். மண்ணின் தன்மைகளுக்கேற்ப தரமான விதை, அதிக மகசூல் விதை, நல்ல உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அப்துல்கலாம் பேசினார். "முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான கேள்விகளை அப்துல்கலாமிடம் நிருபர்கள் எழுப்பிய போது, அவர், "தேசிய அளவில் நீர்நிலைகளை இணைக்கும் பணியை செய்ய வேண்டும். மின்சாரத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தை எடுத்து பயன்படுத்துவது போல தேசிய நீர் தொகுப்பு உருவாக்கி பயன்படுத்த வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...