|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 December, 2011

பொது நுழைவுத்தேர்வு- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!


எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் உங்கள் ஆதரவு கட்சிக்காரர் போல செயல்பட்டு நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி மத்திய, மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகள் என அனைத்துக்கும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாகும்.

நுழைவுத் தேர்வில் விலக்கு ஆனால் மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்ள சில ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென பல மாநிலங்கள் கேட்டுக் கொண்டன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார்.

உச்சநீதிமன்றம் குட்டு முன்னதாக மருத்துவப் படிப்பு, மருத்துவ மேற்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் ஓராண்டு காலதாமதமாக 2013-ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் எச்.எல்,தத்து, சி.கே. பிரசாத் ஆகியோர் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் கூறியவற்றைக் கேட்ட பின்புதான் பொது நுழைவுத் தேர்வுக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. அப்போது 2012-13-ம் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் நீங்கள் ஓராண்டு தாமதமாக நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாகக் கூறியுள்ளீர்கள். இந்த விவகாரத்தை நீங்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன? ஒன்று நாங்கள் உங்கள் மனுவை நிராகரிக்க வேண்டும். அல்லது நீங்களாகவே மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதே நல்லது.இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை நீங்களே எடுத்துக் கொள்ளலாம். உங்களது முடிவுகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒரு கட்சிக்காரராக நீதிமன்றம் செயல்பட முடியாது என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...