|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 December, 2011

தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும்!


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு கனடா படைப்பாளிகள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் உள்ள மிகப் பெரிய மற்றும் மிக முக்கிய தமிழர் அமைப்புகளில் ஒன்று கனடா படைப்பாளிகள் கழகம். இந்த அமைப்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 


ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்த அமைப்பு தற்போது தமிழகம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சியினையில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் கனடாவைச் சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தைத் தாண்டி சர்வதேச அமைப்பு ஒன்று தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை தங்கவேலு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தந்தை செல்வா ஆகியோருக்கு நெருக்கமானவர். தமிழீழத்தின் முக்கிய அரசியல் இலக்கிய விமர்சகருமாவார்.



அறிக்கை விவரம்: ’’தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் உலகத் தமிழினம் பொங்கி எழும்! ஏழு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களையும்பு லம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் கூட்டிப் பார்த்தால் உலகில் 8 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழனுக்கு ஒரு இறைமையுள்ள நாடு இல்லாத காரணத்தால்தான் தமிழன் உதைபடுகிறான், வதைபடுகிறான். தமிழன் என்றால் ஏதிலி என்று உலகம் நினைக்கிறது.இந்தியத் திருநாட்டில் தமிழன் கன்னடம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து அடித்து உதைத்து விரட்டப்படுகிறான். இப்போது தமிழர்களை உதைத்து வெளியேற்றுவதில் பக்கத்தில் உள்ள கேரளாவும் சேர்ந்து விட்டது. முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றும் அது எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் அதனால் அதனை இடித்துவிட்டு வேறு அணை கட்டப்போவதாக கேரளாக்காரர்கள் சொல்கிறார்கள்.



முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை முடித்த பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த ஆணையை இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செல்லாக்காசு ஆக்கிவிட்டது!



இன்றைய கேரளா பழைய சேர நாடாகும். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் சேரநாட்டவர். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு, மன்னர்களின் பண்பு நலன்கள், அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது. இடைக் காலத்தில் வடநாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களின் குடியேற்றத்தால் மொழிக்கலப்பு ஏற்பட்டு சேரநாட்டுத் தமிழ் மலையாளம் எனத் திரிந்து புது மொழியாயிற்று. அந்த மொழிக்கு வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதப்பட்டது. முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறிவிடும். இதில் தலையிட்டு நீதி செய்ய வேண்டிய மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இதனை நாம் பலமாகக் கண்டிக்கிறோம்.



கேரளாவுக்கு வேண்டிய உணவு தமிழ்நாட்டில் இருந்துதான் போகிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது முற்றிலும் தமிழர்கள் வாழும் பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி மாவட்டங்கள் கேராளாவோடு இணைக்கப்பட்டன.இந்திய தேசிய மாயையில் இருந்த காமராசர், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன என்று வேதாந்தம் பேசியதால் தமிழர்கள் இந்த மாவட்டங்களை இழந்தார்கள். தமிழ்நாடு சட்டசபையில் முல்லைப் பெரியாறை இடிக்கக் கூடாது, புதிய அணையை கேரளா கட்டக் கூடாது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அணையின் உயரம் 136 இல் இருந்து 142 ஆக உயர்த்தப் பட வேண்டும் எனக் கேட்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.



இப்போது முல்லைப் பெரியார் அணையை அண்டியுள்ள மக்கள் அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆனால் கேரளாவைப் போலல்லாது தமிழக அரசின் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கினார்கள் என்ற குற்ச்சாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.



கேரளவில் உள்ள இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என மாநில அரசு மத்திய அசை வற்புறுத்த வேண்டும். தேவை ஏற்படின் ஒரு நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்களது விருப்பத்தை அறிய வேண்டும். கேரளாவிலும் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். தமிழக அரசு தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டு தமிழர் சார்பாகச் செயல் படவேண்டும். கேரளா அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தமிழக அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் என்பதை இந்த நேரத்தில் கனடாவில் வாழ்கின்ற மூன்று இலச்சம் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...