|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2011

முல்லைப் பெரியாறு அணை பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை (டிசம்பர் 5) நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என்று தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி அறிவித்துள்ளார்.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் முன்பு ஆஜராவதற்காக தமிழக அதிகாரிகள் தில்லி செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு மாநில அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் ஏற்பாடுகளைச் செய்து வந்தது.ஆனால், உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிகாரப்பூர்வமற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
 
முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் கடந்த 5 மாதங்களில் பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அணை உடையும் அபாயம் இருப்பதாகவும் கேரள அரசு கூறி வருகிறது. இதையடுத்து, இரு மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு அந்த மாநில மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், தமிழக - கேரள எல்லையில் பொது அமைதியைப் பாதிக்கும் வகையில் அந்த மாநிலத்தவர் நடந்துகொள்வதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.அவருக்கு பதில் எழுதிய மன்மோகன் சிங், இந்த விவகாரத்தில் மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்கும் வகையில் எதுவும் செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
 
பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் சுமுகத் தீர்வை எட்ட முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.இதற்காக, இரு மாநில அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு நீர்வளத் துறை அமைச்சகத்தை அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை நீர்வளத் துறை அமைச்சகம் தொடங்கியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரமளிக்கப்பட்ட குழு விசாரணை நடத்தி வரும்போது, அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.நேரில் வலியுறுத்தல்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பிரதமரைச் சந்தித்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் அந்த மாநில அரசின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கும், இரு மாநில நலன்களுக்கும் எதிரானது எனக் கூறி மனு அளித்தனர்.கேரள முதல்வருக்கு பதில்: முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியிருந்தார்.அதற்கு பதில் எழுதிய ஜெயலலிதா, அணை பலமாக உள்ளது என்றும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அணையில் 142 அடி நீர் தேக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள மாநில அரசு மக்களிடையே பீதியைப் பரப்பி வருகிறது. பொய்ப் பிரசாரம் செய்யாமல் அமைதி காக்கும்படி அந்த மாநில அரசைக் கட்டுப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனுவையும் தாக்கல் செய்தது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...