|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 December, 2011

மாணவி தொடர்ந்த வழக்கில் ஏமாற்றும் தமிழக அரசு!

மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வழங்க வேண்டிய லேப்டாப்பை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாங்களே நீதிமன்றம் மூலமாக அந்த லேப்டாப்பை வழங்கி விடுகிறோம் என நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்த மாணவி தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் 2008-ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்தேன். பொதுத் தேர்வில் 474 மதிப்பெண் எடுத்தேன். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தேன். இதில் 5 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைத்தது. இதன் காரணமாக மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் கிடைத்தது. மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்த வகையில் லேப்டாப் கேட்டு விண்ணப்பித்தேன். முதல்வருக்கும் கடிதம் எழுதினேன். இதுவரை எனக்கு லேப்டாப் வழங்கவில்லை. லேப்டாப் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தீபா கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, தீபாவுக்கு லேப்டாப் வழங்க கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதுவரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதை தொடர்ந்து தமிழக கல்வித் துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தீபா தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜோதிமணி இன்று மீண்டும் விசாரித்தார். கல்வித் துறை செயலாளர் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, லேப்டாப் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. உடனே வழங்கி விடுகிறோம் என்றார். இதைக் கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தில் லேப்டாப்பை ஒப்படையுங்கள். நீதிமன்றம் மூலமாக மாணவிக்கு லேப்டாப்பை கொடுத்து விடுகிறோம் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...