|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 January, 2012

உங்களது செயல்பாட்டில் வெற்றியடைய...

நமது தோல்விகளை நினைத்து நொந்து கொள்ளும் அதேநேரத்தில், அதற்கான காரணம் குறித்து எத்தனை பேர் முறையாக ஆய்வு செய்கிறோம்? பலவிதமான திறமைகளையும், ஆற்றல்களையும் கொண்டிருக்கும் நாம், அவைகளை முறையாக பயன்படுத்தவிடாமல் தடுக்கும் பலவீனங்களை அடையாளம் கண்டு களையாமல் இருப்பதால்தான், நம்மால் எதையும் சாதிக்க முடிவதில்லை.
உதாரணமாக, ஒருவர் வரலாற்றுப் பாடத்தில் சிறந்த பகுப்பாய்வு திறனும், நல்ல விஷய ஞானமும் கொண்டிருப்பார். ஆனால், வரலாறு தொடர்பான போட்டித் தேர்வில் அவரால் தேர்ச்சிப் பெற முடியாது. ஒருவர், நடைமுறை ரீதியாக கணிதத்தில் சிறந்த வல்லுநராகவும், சுயமாக தேற்றங்களை உருவாக்குபவராகவும் இருப்பார். ஆனால், அதுதொடர்பான போட்டித் தேர்வுகளைக் கண்டால் பயம். இன்னொருவர், நிறைய பொது விஷயங்களை ஆழமாக ஆராய்ந்து, விரிவாக பேசக்கூடியவராக இருப்பார். ஆனால், பொதுஅறிவு வினாடி-வினா போட்டிகளில் வெற்றிபெற முடியாது. ஒருவர் நடைமுறையில், சிறந்த இலக்கியவாதியாக இருப்பார். ஆனால், இலக்கியப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற முடியாதவராக இருப்பார். ஒருவர், வாய்வழி கதை சொல்வதிலும், சம்பவங்களை விவரிப்பதிலும் சிறந்தவராக இருப்பார். ஆனால், அதையே எழுதச் சொன்னால், அவரால் முடியாது. இதுபோன்ற நபர்கள், எதனால் தாங்கள் இந்த வகை திறமைகளில் பின்தங்கியிருக்கிறோம் என்பதைப் பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல அம்சங்கள், இன்றைய வாழ்வின் அத்தியாவசியமான அம்சங்களாக மாறியுள்ளன. எனவே, அவற்றில் தேர்ச்சியடைவது மிகவும் முக்கியம்.
பலவீனங்களை அடையாம் காணல் நீங்கள், ஒரு வரலாற்று நாயகரைப் பற்றி, ஓரிடத்தில் உரையாற்ற செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உரை முடிந்த பின்னால், உங்களது செயல்பாட்டின் மீது உங்களுக்கே திருப்தி ஏற்படவில்லையெனில், பின்வரும் சிலவிதமான கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, அதை சரிசெய்ய வேண்டும்.
* அந்த வரலாற்று நாயகரின் வாழ்க்கையை முதலில் நான் முறையாக புரிந்து கொண்டேனா?
* சரியான முறையில் அவரது வாழ்க்கை சம்பவங்களை ஒப்பிட்டு பேசினேனா?
* முக்கியமான ஆண்டுகள், பெயர்கள் ஆகியவற்றை சரியாக குறிப்பிட்டேனா?
* அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் அழுத்தம் கொடுத்தேனா?
* போதுமான அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேனா?
* கோர்வை சரியாக இருந்ததா?
* எனது உடலசைவுகள் மற்றும் நான் நின்ற விதம் சரியானதா?
* எனது குரல் சத்தம் சரியாக இருந்ததா? மற்றும் நிதானமாக பேசினேனா?
* கொடுக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்ப பேசி முடித்தேனா?
உட்பட ஏராளமான அம்சங்கள் சுயபரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அதற்காக, வழக்கமான, பலரும் பின்பற்றும் விஷயங்களையே செய்ய வேண்டும் என்பதில்லை. மனித வாழ்க்கையின் மகத்துவமே, பழைய சம்பிரதாயங்களை உடைப்பதும், புதுமையைப் புகுத்துவதும்தான். எனவே, பலரும் வரவேற்கும், பலரும் விரும்பும் அம்சத்தை நீங்கள் கண்டறிந்தால், அதை தயங்காது பயன்படுத்துங்கள்.  உதவியை நாடுதல் உங்களது பலவீனத்தை அடையாளம் காண்பதற்கு, நம்பகமானவர்களிடம் உதவியைக் கோரும் அதே நேரத்தில், அந்த பலவீனத்தை களையவும் சரியான நபர்களின் உதவியை நாடலாம். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அதேபோன்ற பலவீனம் இருந்து, அதை களைவதற்கு அவர்கள் என்ன முயற்சி எடுத்து வெற்றி கண்டார்கள் என்பதை அறிந்து நீங்களும் முயற்சிக்கலாம். நீங்கள் மிக சாதாரணமாக நினைக்கும் ஒரு நபர் கூட, உங்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த ஆலோசனையை கொடுக்கலாம். எனவே, யாரையும் எளிதில் அலட்சியம் செய்துவிட வேண்டாம். மேலும், இது தொடர்பாக நிபுணர்கள் எழுதிய புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் வரும் அவர்களின் ஆலோசனையையும் கேட்டுப் பயன்பெறலாம்.
நீங்கள் சாதனை செய்ய விரும்பும் துறையில், உங்களுக்கு முன்பே ஒரு சாதனையை செய்து முடித்தவரின் செயல்பாட்டையும், அனுபவத்தையும் கவனித்து, அதில் உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வாழ்வில் வெற்றிபெறுவதற்கு நேர்மறை எண்ணமும், தன்னம்பிக்கையும் மிகவும் முக்கியம். ஒரு போட்டித் தேர்வை எழுதுவதற்கோ, ஒரு உரையை சிறப்பாக நிகழ்த்துவதற்கோ, ஒரு சவாலான செயலை செய்து முடிப்பதற்கோ, தன்னம்பிக்கையும், மனோதைரியமும், நேர்மறை எண்ணமும் வேண்டும். இவைகளே, வெற்றிக்கான அடி நாதங்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...