|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 January, 2012

தினத்தந்தியிடம் கைமாறிய என்.டி.டிவி-ஹிந்து டிவி சேனல்!


என்.டி.டி.வி- த ஹிந்து பத்திரிக்கை ஆகியவை இணைந்து தொடங்கிய செய்தி சேனலை தமிழின் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தி நிர்வாகம் வாங்கியிருப்பதாகவும், ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் இந்த புதிய டிவி தந்தி நிர்வாகத்திலிருந்து வெளியாகவுள்ளதாகவும் மீடியா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்தப் புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் செய்திச் சேனலுக்குக் கடும் போட்டியைத் தரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன் Metronation Chennai Television Ltd என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்திகள் ஒளிபரப்பட்டன. ஆனால் சன் டிவி நிறுவனத்தின் வியாபித்த நேயர் பரப்பை ஊடுறுவிப் போக இவர்களால் முடியவில்லை. மேலும் புதிய தலைமுறை என்ற புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் சேனலையே பின்னுக்குத் தள்ளியதால் என்டிடிவி-ஹிந்து மேலும் பின்னுக்குப் போய் விட்டது.

தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும் இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. இந்த நிலையில் என்.டி.டி.வி-ஹிந்து சேனல் தினத்தந்தி வசம் கைமாறியுள்ளது. அதனை புதுப்பொலிவுடன் மாற்றம் செய்து களமிறக்க தினத்தந்தி தீவிரமாக உள்ளதாம்.

புதிய செய்திச் சேனலின் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஒ) சந்திரசேகரன் என்பவரும், செய்தி ஆசிரியராக ராஜ் டிவியில் இருந்த ஜெயசீலன் என்பரும் இணைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ் நாளிதழ்களின் அரசனான தினத்தந்தியின் செய்திச் சேனலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சேனலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டுக்கு ஒளிபரப்பை தொடங்க தினத்தந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைமுறையின் வருகையினால் சன் டிவியின் செய்திச் சேனலுக்கு தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது தினத்தந்தியும் புதிய செய்திச் சேனலை களம் இறக்குவதால் செய்திப் போட்டி மகா கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...