|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2012

ஸ்ரீரங்கம் கோவிலில் துவங்கிய முதல் சுதந்திர போர்!

 புத்தக கண்காட்சி உள் அரங்கில், அகநி பதிப்பகத்தின், எட்டு பாகங்கள் கொண்ட இந்திய சரித்திரக் களஞ்சியம் நூல் நேற்று வெளியிடப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் ப.சிவனடி எழுதிய இந்நூலில், கி.பி. 1700 முதல் 1840 ஆண்டு வரையிலான தமிழக, இந்திய, உலக வரலாறு இடம் பெற்றுள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா, அகநி பதிப்பக அரங்கில் நடந்தது. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட, ஓவியர் டிராட்ஸ்கி மருது பெற்றுக் கொண்டார்.  வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்களின் வரலாற்றை, ஆய்வு செய்து உண்மையான வரலாறு இதில் எழுதப்பட்டுள்ளது. நமக்கு வரலாறு மிக முக்கியம். ஏனெனில் வரலாறு தெரியாத எவராலும், வரலாறு படைக்க முடியாது. உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் பண்பாடு, கலாசாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் நாம் என்பதை, இந்நூல் வாசித்தால் உணர முடியும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.  தொகுப்பாசிரியர் வெண்ணிலா கூறியதாவது:இன்றைய இளைய தலைமுறைக்கு வலைதளங்கள் தெரிந்த அளவிற்கு, நம் வரலாறு தெரிவதில்லை. அவர்கள் அதை புரிந்து கொள்வதற்கே நாங்கள் கடுமையாக உழைத்து, இந்நூலை உருவாக்கி இருக்கிறோம். வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளை நாம் படித்தால் தான், தற்போது அனுபவிக்கும் சுதந்திரம் எவ்வளவு ரணங்களுக்கும், ரத்தத்திற்கும் மத்தியில் பெற்றிருக்கிறோம் என்பது புரியும். குறிப்பாக, 1801ல் நடந்த மறவர் போர். இந்தியாவின் வமுதல் சுதந்திர போராட்டம் என, 1857ல் நடந்த மீரட் கிளர்ச்சியை இன்றைய வரலாறு சொல்கிறது. ஆனால், இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நாங்குநேரியில் நடந்த மறவர் போர். மீரட் போர் 60 கிலோ மீட்டருக்குள் நடந்தது. ஆனால், மறவர் போர் 200 கி.மீ., தொலைவு வரை நடந்தது. மருது சகோதரர்கள், ஊமைத்துரை, செவத்தையா, கோபால் நாயக்கர் உள்ளிட்ட தலைமையின் கீழ் இப்போர் நடந்தது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் திருக்கோவிலில் அதற்கான கூட்டம் நடந்தது. நம்மை ஜெயிக்க முடியாமல் ஆங்கிலேயர்கள் திண்டாடினர். சரணடையவில்லை என்றால் காளையர்கோவிலை தகர்த்து விடுவோம் என ஆங்கிலேயர் எச்சரித்த போது தான், கோவிலுக்காக நம் மன்னர்களும், வீரர்களும் சரணடைந்தனர். பின் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திர போர் இப்படி முடிந்தது. இந்த நூலை சாட்சியாக வைத்தே ஐகோர்ட்டில் இந்தியாவின் முதல் சுதந்திர போர், மறவர் போர் என்று அறிவிக்க கோரி வழக்கு நடந்து வருகிறது. இதுபோன்ற வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, 25 ஆண்டுகளுக்கு பிறகு பதிப்பித்திருக்கிறோம். இவ்வாறு வெண்ணிலா கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...