|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 February, 2012

டாஸ்மாக் வருமானத்தைவிட குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் உயர் நீதிமன்றம்!

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோல்டன் என்க்ளேவ் என்ற அடுக்குமாடி வணிக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அலுவலகங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.ஏராளமான அலுவலகங்கள் செயல்பட்டு வரும் எங்கள் வளாகத்தின் கீழ்த் தளத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படுகிறது. அங்கு பொது இடத்தை சட்ட விரோதமாக அடைத்து உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த டாஸ்மாக் கடை காரணமாக எங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் தினமும் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். மதுபானக் கடைக்கு அருகிலேயே ஐந்து பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பயிலும் மாணவர்கள் பலர் எழுதுபொருள்களை வாங்கவும், நகல் (ஜெராக்ஸ்) எடுக்கவும் எங்கள் வணிக வளாகத்தினுள் வந்து செல்கின்றனர். இங்கு செயல்படும் நடனப் பள்ளிக்கும் தினமும் பல மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் வளாகத்தின் உள்ளே செயல்படும் டாஸ்மாக் கடை காரணமாக இந்த மாணவர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இது தவிர வளாகத்துக்கு எதிரேயுள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்களுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் என, பலரும் குடிகாரர்களால் பலவேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே எங்கள் வளாகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

"டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தைவிட, நாட்டிலுள்ள குழந்தைகளின் எதிர்காலமும், அவர்களின் பாதுகாப்பும்தான் மிகவும் முக்கியம். ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் யாரும் கண்ணீர் வடிக்கப் போவதில்லை.ஆண்டுக்கு ரூ.16 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஒரு கடையை மூடுவதால் அரசுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை.ஆகவே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை பிப்ரவரி 20 ம் தேதிக்குள் அரசு மூட வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப்ரவரி 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...