|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2012

ரூ.2,010 கோடியில் திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்!

நகரி :திருப்பதி தேவஸ்தானம், 2012 -13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதன் முதலாக, 2,010 கோடி ரூபாய்க்கான பட்ஜெட், தேவஸ்தான போர்டின் பட்ஜெட் கூட்டத்தில், பக்தர்களின் மீது சுமையின்றி ஆமோதிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான போர்டின் கூட்டம், சேர்மன் பாபிராஜி தலைமையில் நேற்று முன்தினம் திருமலையில் நடந்தது. பின்னர், பாபிராஜி பட்ஜெட் அம்சங்கள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:புது மணமக்களுக்கு தேவஸ்தானம் சார்பில், இலவசமாக நடத்தி வைக்கப்படும், "கல்யாண மஸ்து திருமண நிகழ்ச்சிகளை, இனி திருமலையில் மட்டுமே நடத்த தீர்மானிக்கப்பட்டது. "நித்ய கல்யாணம் என்ற பெயரில் இத்திருமணங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில் கன்னியாகுமரி, அரியானா மாநிலத்தில் குருஷேத்திரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்ட, பட்ஜெட்டில், 22 கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். இதுவரையில் அதிகளவு முன்பதிவு செய்துள்ள ஆர்த்தி சேவா டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்படும்.தலித், தாழ்த்தப்பட்ட சிற்றூர்களில் கோவில் கட்ட வழங்கப்பட்டு வரும் நிதியை, 5 லட்சத்தில் இருந்து, 10 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கு பட்ஜெட்டில், 12 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். திருமலையில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்ய, மேலும் புதிதாக ஏழு (தர்ம ரதம்) பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்தும், "கல்யாண கட்டா கட்டடங்களில் பக்தர்களுக்கு மேலும் வசதி ஏற்படுத்தித் தரப்படும். "ஸ்வரணம் திட்டத்தின் கீழ், வாய் பேசாத, காது கேளாத குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், 150 இடங்களில் சீனிவாச கல்யாண உற்சவம் நடத்த அனுமதி அளிக்கப்படும். திருமலையில் "நந்தகம் விடுதி வளாகப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அங்கு கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும்.திருப்பதி தேவஸ்தான சொத்துக்கள் மற்றும் பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க அனுமதிக்கப்படும். திருமலை கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, "இன்னர் கேரிடார் என்ற பெயரில், திருமலையைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கவும், அலிபிரியில் பாதுகாப்பை பலப்படுத்த நவீன வசதியுடன் கண்காணிக்கவும் நிதி ஒதுக்கப்படும்.திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நடைபாதை வழியில், 20 கி.மீட்டருக்கு ஒரு இடத்தில், பக்தர்கள் ஓய்வு எடுக்க கட்டடங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்படும்.திருமலையில் துப்புரவு மற்றும் தூய்மைக்காக, முன்னுரிமை அடிப்படையில், 58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நித்ய அன்னபிரசாதம் டிரஸ்டுக்கு நிதி பற்றாக்குறையை போக்க, 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு பாபிராஜி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...