|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2012

யாதுமாகி நிற்பவள் பெண்!


பெண் என்பவள் சக்தியின் அம்சம். உலகின் இயக்திற்கு தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவளாக பெண் இருக்கின்றாள். 101 வது மகளிர் தினம் கொண்டாட உள்ள இந்த வேளை மங்கையரின் சக்தியை தெரிந்து கொள்வோம். உலகில் இனப்பெருக்கம் என்பது அத்தியவசியமானது. அது இல்லையேல் உலகமே ஸ்தம்பித்து விடும். இதற்கு பெரும் பங்கு வகிப்பது பெண்மணிகள்தான். கருவை உருவாக்குவதோடு ஆண்களின் கடமை முடிந்து விடுகிறது. பத்துமாதம் கருவை சுமந்து குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்வது வரை பெண்கள் சக்தியின் அம்சமாக இருந்து வலிகளை தாங்கிக் கொள்கின்றனர். ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான் வளர்ச்சியில் முதன்மையாக உள்ளனர்.குப்புறப்படுப்பது,சிரிப்பது,தவள்வது,நடப்பது,பேசுவது எல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றனர் என்பது விஞ்ஞான உண்மை.

சாதனை பெண்மணிகள் அறிவை வளர்க்கும் புனித இடமான கல்விக்கூடங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான். ஏனெனில் அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர். செவிலியர்கள்,மருத்துவர்கள்,விமானப்பணிப்பெண்கள்..இப்படி அநேகர் சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களே அதிகம்.
மடக்கும் பெண்மணிகள் ரகசியமாக குரலை தாழ்த்தி கிசுகிசுப்பது முதல், மற்றவர்களின் கவனத்தைக் கவர உச்சஸ்தாயியில் பேசுவதிலாகட்டும் இவர்களுக்கு நிகரில்லை. ஒரே கேள்வியை பலவித கோணத்தில் அலுக்காமல் கேட்டு உண்மையை அறியும் வல்லமை இவர்களுக்கே உண்டு. 

கிரகிக்கும் தன்மை அதிகம் பெண்கள் அதீத பார்வைத்திறன் கொண்டவர்கள். எந்த ஒரு கூட்டமான இடத்துக்கு சென்றாலும் தெரிந்தவர் தலை இவர்களது கண்களுக்கு சட்டென சிக்கிவிடும். அதேபோல் பெண்கள் கூர்மையான கவனிக்கும் தன்மை கொண்டவர்கள். முணுமுணுக்கும் ஆண்களிடம் இருந்து வார்த்தைகளை கவனித்து கரெக்டாக பாயிண்ட் அறிந்து கொள்வார்கள்.

மோப்ப சக்தி மோப்ப உணர்விலும் இவர்களை அடித்துக்கொள்ள வாய்ப்பில்லை.ஒரு உணவகத்திற்கு சென்றால் உணவுப்பொருளை மோப்பம் செய்தே இன்னென்ன சமையல் பொருட்கள் சேர்த்து செய்த உணவுப்பண்டம் இது கண்டு பிடித்து சொல்வது முதல் எதிர் பிளாட்டில் இருந்து வரும் வாசனை,கீழ் பிளாட்டில் இருந்து வரும் சமையல் வாசனையை நுகர்ந்து எளிதில் இன்னவகை உணவு என்று கண்டுபிடிக்கும் தகுதி இவர்களுக்கே உரித்தானது.

கற்பூர புத்தி எதையும் சட்டுன்னு புரிந்து கொள்ளும் கற்பூரப்புத்தி பெண்களுக்கு மட்டுமே உண்டு என்பது கண்கூடான உண்மை. வீட்டில் அலமாரிகளில் மலை போன்று குவித்து பொருட்கள் இருந்தாலும் கண்பார்த்ததும் கையால் எடுக்கும் திறமை பெண்களைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெண்களால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பது திண்ணமான உண்மை. போனை எடுத்தால் அது அனலாக கொதிக்கும் வரை பேசித்தீர்ப்பதில் சூராதிசூரர்கள்.

தோழமை உணர்வு பெண்கள் யாருடனும் சட்டென்று பழகிவிடுவார்கள். அதிக தோழமை உணர்வு பெண்களுக்கு மட்டுமே உரித்தானது. பிறந்த வீட்டு உறவினர்களையும், புகுந்த வீட்டு உறவினர்களையும் பேலன்ஸ் செய்து ,சமாளித்து வாழ்வியலை அழகாக்குவதும் இவர்களே. பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தாலும் கமுக்கமாக சேமிப்பில் செம கில்லாடிகள் இவர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

நினைவாற்றல் அதிகம் கடுகளவேணும் ஒரு சிறு பொருளைப்பார்த்தாலும் அது என்ன வென்று அடையாளம் கண்டு பிடிப்பதில் இருந்து மண்டையில் அது பற்றி ஏற்றிக்கொள்வது,மனசில் அது பற்றி படிக்கறது,பிரிதொரு சமயத்தில் அது எங்கே எப்படி,எவ்வளவுக்கு கிடைக்கும் என்பதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஞானச்செல்விகள் இவர்கள். ஒருத்தர் தெரிந்த மொழியில் பேசி புரியா விட்டாலும் புரிந்த மாதிரி காட்டிக்கொள்வது முதல், புரியாதவர்களுக்கு புரியும் வரை அலுப்பு சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப சொல்லி புரிய வைப்பதில் புண்ணியர்களும் இவர்களே. இப்படி இயற்கையும் விஞ்ஞானமும்,சுற்றுப்புறமும் பெண்களுக்கு தன்னிகரில்லாத ஆற்றலை தந்திருப்பதால்தான் பெண்களால் அனைத்துமாகி நிற்க முடிகிறது. வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தாண்டி சாதிக்க முடிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...