|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2012

இன்று உலக தண்ணீர் தினம்.


பழமையும், பெருமையும் மிக்க, நம் பாரதத் திருநாடு சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளாக போகிறது. ஆனால் இன்னமும் அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், தண்ணீருக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு தரவேண்டும், என்ற அடிப்படை சிந்தனை கூட எந்த அரசியல்வாதிக்கும் இதுவரை தோன்றவில்லை என்பதே இந்திய குடிமகனின் வேதனை. இங்கே பெண்கள். ஐந்து குடம் தண்ணீருக்கு, பத்து கிலோமீட்டர் தூரம் நடைபயணம். அதுவும் இடுப்பில் சுமையுடன். குடிநீர் வசதி இல்லாத கிராமங்கள், இன்றும் இருக்கிறது என்றால் அவமானம், அரசியல்வாதிகளுக்குத் தான். தேடிச் சென்று, ஓட்டு கேட்பதோடு வேலை முடிந்துவிட்டதென நினைக்கும் அவர்களின் அறியாமையால், தண்ணீரைத் தேடிக் கொண்டே இருக்கின்றனர், கிராம மக்கள். அத்தகைய கிராமத்தைத் தேடி, நமது நிருபர்கள் குழு பயணித்தது. வரிசையில் நின்றும், நடந்தும் கால்கடுக்கும் வலியோடு, வேதனையும் கண்களில் தெறித்தது, நம் கிராமத்து பெண்களுக்கு. என்று தீரும் இந்தத் தண்ணீர் தாகம் இந்தக் கிராமங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உங்கள் பார்வைக்கு படம் பிடித்துத் தருகிறோம்.

உசிலம்பட்டியில் ஒரு பொட்டல்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ளது பொட்டல்பட்டி ஊராட்சி. இங்குள்ள சிறுகிராமம் போலிப்பட்டி. கிராமத்தைப் போலவே, பெயருக்கு "மோட்டார் பம்ப்' உள்ளது. குடிநீருக்கு இங்கே வழியில்லை. முக்கால் கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அருகில் உள்ள கருப்பசாமி கோயில் பகுதியில் தண்ணீர் பிடிக்கின்றனர். அங்கே பைப்பில் அடித்தால், எப்போதும் குடிநீர் வரும். இங்குள்ள 150 குடும்பங்களின் ஒட்டுமொத்த குடிநீர் ஆதாரம் இதுதான். மோட்டார் தண்ணீர் சுவையின்றி இருப்பதால், சமைப்பதற்கான தண்ணீருக்கும் நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர். குடும்பத்தலைவி பாப்பா கூறுகையில்,""எங்க வீட்டுல ஆளுங்க அதிகம். குடிக்க, சமைக்கறதுக்கு குறைஞ்சது ஒருநாளைக்கு எட்டு குடம் தண்ணீ வேணும். எட்டுதரம் போகணும்னா, அதுலய நாலு மணி நேரம் போயிடும். அடிக்கடி கரன்டு போறதால, மோட்டார் பம்ப்பிலும் தண்ணீ வரல. துவைக்க, புழக்கத்திற்கும் அடிச்சு தான் எடுக்கணும். தினமும் பாதிநேரம் குழாய்ல தான் இருக்கோம்,'' என்றார்.

வைகைக்கரையோரம் இப்படி வேதனை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் நென்மேனி ஊராட்சிக்கு உட்பட்ட லெட்சுமணன் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வைகை ஆற்றின் கரையோரத்தில் உள்ள இப்பகுதி பெண்கள், குடத்துடன், ஊற்று நீருக்காக வைகை ஆற்றில் தவம் கிடக்கின்றனர். ஒரு குடம் தண்ணீர் நிரம்ப அரை மணிநேரம் ஆகிறது. ஒரு குடம் எடுத்து திரும்ப ஒரு மணி நேரம் ஆகிறது. பெரும்பாலும் விவசாய பணி செய்து வரும் இப்பகுதி பெண்கள் குடிநீருக்காக சில நாட்களில் வேலைக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த ஊற்றும் அக்னி வெயிலுக்கு தாக்குப்பிடிக்கவில்லை. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்களில் உப்புநீர் மட்டுமே வருவதால், பல நாட்கள் இந்த நீரையே குடிக்கும் அவலநிலையில் உள்ளனர். ரத்தினம்மாள்(மகளிர் மன்ற தலைவி, லெட்சுமணன்குடியிருப்பு): பல ஆண்டுகளாக இங்கு குடிநீர் பெரும் பிரச்னையாக உள்ளது. மணல் குவாரி மற்றும் வைகை வெள்ளத்தால் பைப்புகள் தொடர்ந்து உடைபட்டுள்ளன. ஆற்றில் வெள்ளம் வரும் போதும், வறட்சி காலங்களிலும் உப்புநீரையே குடித்து வருகிறோம். ஊராட்சி துணைத்தலைவர் தனுஷ்கோடி: வைகை ஆற்றில் ராட்சத கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க செய்யவேண்டும்.

ஊற்று நீரே உயிர்: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் இலந்தைக்கரை ஊராட்சியில் விலாங்காட்டூர், கிராம்புலி, பழுவூர் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர், பளுவூர் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து கிடைக்கும் தண்ணீர் உவர்ப்பாக உள்ளது. வேறு வழியில்லாமல் விலாங்காட்டூர் நாட்டார் கால்வாயில் மூன்று அடி ஆழத்தில் இரண்டு குழி தோண்டி அகப்பையால் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைப்புகள் வழங்கியும் தண்ணீர் வரவில்லை. கோடை காலத்தில் ஊற்று வறண்டு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே தண்ணீர் ஊறும். இதனை போட்டி போட்டு கஷ்டப்பட்டு எடுக்க வேண்டிய நிலை. இக்கிராம மக்கள் கூறுகையில் , "கோடை காலத்தில் ஊற்று குறைந்து ஒருகுடம் தண்ணீர் எடுக்க பலமணி நேரம் ஆகி விடும். இரவு நேரங்களில் விடிய விடிய காத்திருந்து தண்ணீர் பிடித்து வருகிறோம். மூன்று நாட்களுக்கு ஒரு குடம் தண்ணீர் கிடைப்பது கடவுள் செயல், வரிசையில் இடம் பிடிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் தாராளம்.வெயில் நேரத்தில் குடி தண்ணீர் தேடுவதிலேயே எங்கள் காலம் கழிந்து விடுகிறது,' என்றனர். பழுவூர் முத்தையா: ராமநாதபுரம் கூட்டு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வந்ததில்லை. ஊற்று தண்ணீரும் இல்லை என்றால் கிராமத்தை விட்டு வெளியேறுவதை விட வேறு வழியில்லை.

மலைக்கிராமம் என்றாலும் தவிப்பு தான்: தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறும், வைகை ஆறும் பாய்வதால் வளம் கொழிக்கும் மாவட்டம் என்றுதான் நினைக்கத்தோன்றும். ஆனால் மாவட்ட தலைநகரான தேனி உட்பட வைகை ஆற்றின் துவக்க பகுதியாக உள்ள வருஷநாடு மலை கிராமங்களிலும் மக்கள் குடிநீருக்காக தவிக்கின்றனர், என்றால் நம்ப முடியாதுதான். உண்மை நிலை அது தான். மாவட்டத்தில் கோடை துவங்கி விட்டாலே குடிநீர் தட்டுப்பாடும் துவங்கி விடுகிறது.மூலவைகை உற்பத்தியாகும் வருஷநாடு வாலிப்பாறை அருகில் உள்ள மலை கிராமம் உருட்டிமேடு.இங்கு 20 குடும்பங்கள் வசிக்கின்றன. மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இருந்தும், 10 ஆண்டுகளாக அதில் குடிநீர் ஏற்றப்படாததால் காட்சிப்பொருளாகவே உள்ளது. குடிநீருக்காக அருகில் உள்ள வைகை ஆற்றில் ஊற்று தோண்டி எடுக்கும் நிலை உள்ளது. குடியிருப்பில் இருந்து ஆற்றுக்கு வரவேண்டும் என்றால், செங்குத்தான பாறையில் ஏறி ஆற்றுக்குள் இறங்கும் நிலை உள்ளது. தண்ணீர் குடங்களுடன், பாறைகளின் மேல் ஏறிச்செல்லும் வயதான பெண்களைப்பார்க்கவே பரிதாபமாக உள்ளது. பி.கல்யாணி: வயதானவர்கள் குடங்களுடன் பல நேரங்களில் பாறைகளில் விழுந்து அடிபட்டுள்ளனர். இதற்கு விடிவு காலம் எப்போது வருமோ. ஊராட்சி தலைவரிடம் இந்த பாறைகள் வழியாக இறங்குவதற்கு வசதியாக பாறைகளை உடைத்து படிக்கட்டுகளாவது அமைத்து தாருங்கள் என்று கேட்டு விட்டோம். எஸ்.வேல்த்தாய்:பாறைகளில் ஏறி இறங்கி தண்ணீர் எடுக்க முடிவதில்லை. இதனால் ஆண்களின் உதவியை நாடுகிறோம். ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கிறோம். இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதனால் ஆற்றில் வரும் அசுத்தமான நீரையே குடிநீராக பயன்படுத்துகிறோம்.

மதுரையில் எப்படி: மதுரை மாநகராட்சியில் 58 சதவீதம் வீட்டு இணைப்புகள் மூலம், 42 சதவீதம் பொது குடிநீர்க் குழாய்கள் மூலம் வினியோகம்.இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று மணி நேரம் குழாய்களில் வினியோகம்.நபர் ஒருவருக்கு, தினமும் சராசரியாக 114 லிட்டர் குடிநீர் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பழுதான சேவை மூலம் வீணாகும் தண்ணீரின் அளவு 15 சதவீதம்.

தண்ணீர்த்துளிகள்...

* உலகளவில் ஒவ்வொரு நாளும், தூய்மையற்ற குடிநீரைப் பருகுவதன் மூலம் 25ஆயிரம் பேர் இறப்பதாக, ஐ.நா., சுற்றுப்புற திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

* நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு ஒரு லிட்டருக்கு 0.75 முதல் 1.5 மில்லிகிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

* இந்தியாவின் நகர்ப்புறங்களில் சராசரியாக 64 சதவீத மக்களுக்கே, வீட்டுச் சேவை இணைப்புகள் மற்றும் பொது குடிநீர் நிலைகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

* நபர் ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்பது தேசிய இலக்கு. ஆனால் நகரங்களுக்கு ஏற்ப 37 முதல் 298 லிட்டர் வரை வழங்கப்படும் அளவு மாறுபடுகிறது.

* பழுதான சேவை இணைப்புகள், குழாய்கள், மீட்டர் இணைப்புக் கோளாறுகளால் 70 சதவீத தண்ணீர் வீணாகிறது.

1 comment:

  1. தண்ணீர் தண்ணீர் என்று தவிக்கும் மக்களின் கண்ணீர்க்காவியத்தை உலகதண்ணீர் தினத்தில்
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...