|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 April, 2012

தபால் நிலையங்களில் நவீன சோலார் விளக்கு...


தபால் நிலையங்களில் இப்போது நடைமுறையில் உள்ள சூரிய ஒளி (சோலார்) விளக்கு விற்பனைத் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த தபால் துறை திட்டமிட்டுள்ளது.தபால் பரிமாற்றச் சேவை, பணப் பரிமாற்றம் (மணி ஆர்டர்) மற்றும் சிறு சேமிப்பு உள்ளிட்ட சேவைகளை அளித்து வந்த தபால் துறை, இப்போது மக்களின் நலனைக் கருதியும் வருவாயைப் பெருக்கவும் மேலும் சில அத்தியாவசியச் சேவைகளை வழங்கி வருகிறது.


தங்க நாணய விற்பனை, ரயில் டிக்கெட் முன்பதிவு, மின் கட்டணம் செலுத்தும் வசதி, கைக் கடிகார விற்பனை, ரூ. 3,790 விலை கொண்ட மினி குளிர்சாதனப் பெட்டி விற்பனை என பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.ஒன்பது கிலோ எடை கொண்ட இந்த மினி குளிர்சாதனப் பெட்டியை எங்கு வேண்டுமானாலும் கையிலேயே தூக்கிச் செல்லலாம்.இதுபோன்று மக்களுக்கு மிகவும் அவசியமான சேவைகளை செய்து வரும் தபால் துறை இப்போது மிகவும் அத்தியாவசியமான சூரிய ஒளி விளக்கு விற்பனையிலும் இறங்கியுள்ளது.பல மணி நேர தொடர் மின்வெட்டுப் பிரச்னையை சந்தித்து வரும் மக்களிடையே இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாள் முழுவதும் சூரிய ஒளியில் சார்ஜ் செய்து, இரவு முழுவதும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தனியார் நிறுவனம் ஒன்றுடன் கைகோத்து இந்தத் திட்டத்தை தபால் துறை செயல்படுத்தி வருகிறது.
சென்னையை அடுத்துள்ள கிராமப் பகுதிகளில் மட்டுமே: முதல் கட்டமாக சென்னையை அடுத்துள்ள கிராமப் பகுதிகளில் மட்டுமே இந்த சூரிய ஒளி விளக்கு விற்பனை திட்டத்தை தபால் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுகுறித்து சென்னை தலைமை தபால் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று வகையான சோலார் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. டி.லைட் எஸ்250, டி.லைட் எஸ்10, டி.லைட் எஸ்1 என்ற மூன்று வகை விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.இதில் டி.லைட் எஸ்250-ன் விலை ரூ.1,699 ஆகும். இது சி.எல்.எஃப். பல்புகளைக் காட்டிலும் அதிக வெளிச்சத் திறன் உடையதாக இருக்கும். 50 ஆயிரம் மணி நேரம் எரியக் கூடியவை. இதற்கு 12 மாதம் உத்தரவாதமும் உள்ளது. இதில் செல்பேசியையும், 1.3 வாட் திறன் கொண்ட சோலார் தகடையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.


டி.லைட் எஸ்10 விளக்கின் விலை ரூ. 549 ஆகும். இது எளிதில் உடைந்து விடாத வகையிலான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 8 மணி நேரம் வரை எரியக் கூடியது.
டி.லைட் எஸ்1 விளக்கின் விலை ரூ.399 ஆகும். இது 6 மாத உத்தரவாதத்தைக் கொண்டது.
எங்கெல்லாம் கிடைக்கும்? இப்போது சென்னையை அடுத்துள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தலைமை தபால் நிலையங்கள், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திருப்போரூர், கருங்குழி, உத்தரமேரூர், பெரிய காஞ்சிபுரம், திருப்பெரும்பூதூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, லத்தேரி, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கனியம்பாடி, சத்துவாச்சாரி ஆகிய துணைத் தபால் நிலையங்கள் உள்ளிட்ட 19 தபால் நிலையங்களில் மட்டும் இந்த சூரிய ஒளி விளக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விரைவில் சென்னையில்: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தபால் நிலையங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சியை தபால் துறை இப்போது எடுத்து வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, விரைவில் இந்தக் குறைந்த விலையிலான சோலார் விளக்குகள் தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் கிடைக்கும் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...