|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 April, 2012

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படமாக பாலை தேர்வு!


நல்ல தராமான தமிழ்த் திரைப்படங்களை நார்வேயில் வாழும் தமிழர்களுக்கும் நார்வே நாட்டு குடிமக்கள் மற்றும் சர்வதேச மக்களின் பார்வைக்கும் எடுத்துச் செல்லும் நோக்குடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படும் நார்வே சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா மூன்றாவது ஆண்டாக இம்முறை ஏப்ரல் 25 முதல் 29 வரை நடைபெற்றது. தமிழ்த் திரைப்படங்களுக்காக மட்டும் சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒரே திரைத்திருவிழா இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அழகர்சாமியின் குதிரை, வெங்காயம், வாகைசூடவா, கோ, ஆரண்ய காண்டம், தீராநதி(பிரான்சு), எங்கேயும் எப்போதும், போராளி, மயக்கம் என்ன, பாலை, உச்சிதனை முகர்ந்தால், வர்ணம், ஸ்டார் 67(கனடா), மகான்கணக்கு, நர்த்தகி ஆகிய 15 படங்கள் இந்த விழாவில் திரையிடத் தேர்வாகியிருந்தன. 

விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலை படத்தின் இயக்குநர் ம. செந்தமிழனுக்கு கடந்த வருடத்தின் சிறந்த சமூக விழிப்புணர்வுத் திரைப்பட இயக்குநர் விருது வழங்கப்பட்டுள்ளது. தனது அடுத்த பட வேலைகளின் காரணமாக இயக்குநர் செந்தமிழன் நார்வே செல்லாத காரணத்தால் பாலை படத்தின் கதாநாயகன் சுனில் இந்த விருதை இயக்குநர் சார்பில் பெற்றுக்கொண்டுள்ளார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக 2300 வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்வியலைத் திரைப்படமாக்கிய பெருமைக்குரிய பாலை திரைப்படம் தமிழகத்தில் கடந்த நவம்பரில் வெளியானது. தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் பாலை திரைப்படத்திற்கு சிறப்பான விமர்சனம் எழுதி வெகுவாகப் பாராட்டின. 

தமிழ் உணர்வாளர்களுக்கும், உண்மையான திரைப்படக் காதலர்களுக்கும் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்குமே தமிழரின் வரலாற்றுப் பெருமிதத்தை முதன்முறையாக திரைமொழியில் உணர்த்திய பெருமையைப் பெற்ற படம் பாலை. சங்க காலத் தமிழரின் வாழ்க்கைப் போராட்டத்தை நிகழ்காலத் தமிழரின் வாழ்க்கைப் போராட்டத்தோடு ஒப்பிட்டு துணிச்சலான பல கருத்துகளை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ம. செந்தமிழன். சர்வதேச அளவில் தமிழ்த் திரைப்படங்களுக்காக நடைபெற்ற திரைப்படவிழாவில் “சிறந்த சமூகவிழிப்புணர்வுத் திரைப்படம்” என்ற சிறப்புப் பிரிவில் பாலை திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் இயக்குநருக்கு சிறந்த சமூகவிழிப்புணர்வுத் திரைப்பட இயக்குநர் விருது வழங்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...