|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 December, 2012

தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப் பெறும் உரிமை!

 
நம்ப நாட்டில தாங்க நம்ப முடியலையா? ராஜஸ்தானில் முதல் முறையாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மங்குரோல் நகராட்சி தலைவரின் பதவியைப் பறிப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் நகராட்சி சட்டம் 2009 க்கு உட்பட்ட தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி தலைவராக உள்ள அசோக் ஜெயின் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அசோக் ஜெயினுக்கு எதிராக இந்த திரும்பப் பெறும் உரிமை சட்டத்தை செயல்படுத்துவது என ஜனவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செப்டம்பர் மாதம் கெஜட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது.

2009ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ராஜஸ்தான் நகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அசோக் ஜெயின், தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார். பதவியேற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 16,735 ஓட்டுக்களில் 65.71 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப்பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் ஓட்டெடுப்பு அமைதியாகவும், எவ்வித பதற்றமும் இன்றி முறையாக நடைபெற்றதாக தேர்தல் அதிகாரி தர்ம்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலின் முடிவு டிசம்பர் 14ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் அசோக் ஜெயினுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து பாதிக்கும் மேற்பட்டோர் ஓட்டளித்து இருந்தால் அசோக் ஜெயினின் நகராட்சி தலைவர் பதவி பறிக்கப்படும். அசோக் ஜெயின், சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த தேர்தல் குறித்து தெரிவித்த அசோக் ஜெயின், தான் நேர்மையானவர் எனவும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வின் கூட்டுச்சதி இது எனவும், இந்த தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் நேர்மையானவரா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...