|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 February, 2013

மதுரை என்ற பெயர் வந்தது எப்படி?

சிவபக்தனான குலசேகர பாண்டிய மன்னனிடம்  சில பொருட்களை விற்க, தனஞ்ஜெயன் என்னும் வணிகர் வந்தார். வியாபாரத்தை முடித்துவிட்டு கடம்பமரங்கள் அடர்ந்த காட்டில் தங்கினார். அன்று இரவில், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு. வானிலிருந்து இறங்கி வந்த தேவர்கள்  வழிபாடு நடத்தியதைக் கண்டார். ஆச்சரியமடைந்த அவர்,  மன்னனிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார்.  மன்னன் இதைக்கேட்டு ஆச்சரியமடைந்தான். வணிகர் குறிப்பிட்ட இடத்தில் கோயில் எழுப்பி, சுற்றிலும் வீதிகளை உண்டாக்கி, ஒரு நகரத்தை அமைத்தான். அப்போது அந்நகரின் மீது சிவனின் நெற்றியில் இருந்த சந்திரனில் இருந்து அமிர்தம் தெளிக்கப்பட்டது. அதனால், அந்த நகருக்கு மதுரை என்ற பெயர் ஏற்பட்டது. (அமிர்தத்தை மது என்றும் சொல்வர்)  மாண்புமிகு மதுரை பிறந்தநாள் தெரியுமா?  இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, மதுரை. 

உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.சுமார் 2500 ஆண்டுகளுக்கு  முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப்  பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் கூடல் என்றும், கலித்தொகையில் நான்மாடக்கூடல் என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில்  மதுரை என்றும் அழைக்கப் படுகிறது. 

சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது.  சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர்,  நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்  வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை.  ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பதியெழுவறியா பழங்குடி மூதூர் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?  தற்போதைய பழமொழியில் கூறப்படும் மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன.  மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, 

நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில்  எழுவர், என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது.  நச் நகரமைப்பு: இந்தக் கால மதுரையை மறந்துவிட்டு, இந்த செய்தியை படியுங்கள், நகரமைப்பு (டவுன் பிளானிங்) என்ற துறை வளராத காலத்திலேயே, உலகுக்கே  அதைக் கற்றுக்கொடுத்தது, பழைய மதுரையின் அமைப்பு. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியே மதுரை நகர் அமைக்கப்பட்டது. கோயிலைச் சுற்றிலும் சதுர வடிவில் தெருக்கள் அமைக்கப்பட்டன. மதுரையை ஆண்ட நாயக்கர்களில் முதல் மன்னர் கி.பி 1159 முதல் 64 வரை ஆண்ட விஸ்வநாத நாயக்கர். இவர் ஷில்பா சாஸ்திர கட்டடக் கலை அடிப்படையில், மதுரை நகரை மீண்டும் வடிவமைத்தார்.  

இவர் சதுர வடிவில் அமைத்த தெருக்களை, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி என தமிழ் மாதங்களின் அடிப்படையில் பெயரிட்டார். அப்போதுதான், தமிழ் மாத பெயர்களின் அடிப்படையில் விழாக்களும் துவங்கின. கோயில் பிரகாரத்தை சுற்றிலும் உள்ள தெருக்கள் விசாலமாக, திருவிழாக்கள் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டன. இத்தெருக்களில் கோயில் தேர்கள், சுவாமி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.  பண்டைய தமிழ் இலக்கியங்களில், மதுரை நகரின் மத்தி மற்றும் தெருக்களில் தாமரை பூக்கள் வளர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு நோக்கி, கோயிலும், நகரமும் உருவாக்கப்பட்டது. கோயிலின் நான்கு பாகங்களிலும் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. கோயிலின் முன் தெருக்களில், சமுகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தவர்க்கும், கடைசி தெருக்களில் சாதாரண மக்களும் குடியமர்த்தப்பட்டனர். 19 நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, காலனித்துவ அரசியல் மற்றும் தொழில்களின் தலைமையிடமாக மதுரை மாறியது.

மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார்.  நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட  ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், அங்காடி வீதிகள் எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் நாளங்காடி எனவும், மாலையில் கூடும் வீதிகள், அல்லங்காடி  எனப்பட்டன. மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக மதுரைக் காஞ்சி கூறுகிறது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...