|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 February, 2013

தமிழ் கல்வி அவல நிலை!

ஒருவிடுமுறை நாள். தேவியும், ராமுவும் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். மரத்தடியிலிருந்து ஒரு அணில்குட்டி தொப்பென்று கீழே விழுந்தது. இருவரும் அணில்குட்டியை எடுத்து அப்பாவிடம் கொடுத்தனர். அப்பா அதற்கு பஞ்சால் பாலூட்டினார். ஒரு அட்டைப்பெட்டியில் வைத்தார். சிறிது நேரம் கழித்து அணில்குட்டி அங்கும் இங்கும் ஓடியது. தேவியும், ராமுவும் அணில்குட்டியை வளர்க்க விரும்பினர். ஆனால், அப்பா அணில்குட்டியை அதே மரத்தடியில் விட்டுவிட்டார். இந்த இரண்டாம் வகுப்புக்குரிய கதையை, தமிழகக் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 70.1 சதவிகிதத்தினரால் திக்கித் திணறிக்கூட வாசிக்க முடியாத நிலை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? - இந்தக் கல்வி அவல நிலையை நம்பித்தான் ஆகவேண்டும். இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மாவட்டங்களில் 2005-ல் இருந்து ஆண்டுதோறும் பள்ளிக் கல்வி ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள், அசர் (ASER) - கல்விநிலையின் ஆண்டறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது. 

'பிரதம்' என்ற தன்னார்வ கல்வி அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த ஆய்வின்போது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனரா? கிராமப்புற பள்ளிகளின் அடைப்படை வசதிகள் இருக்கின்றனவா என்பன பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களின் அடிப்படைக் கற்றல் திறன் ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் முடிவில் கிடைத்தத் தகவல்களில் பெரும்பாலானவை அதிர்ச்சி தரும் வகையிலேயே உள்ளன. அந்த ஆய்வு முடிவுகளின்முக்கிய அம்சங்கள் இவை...

* தமிழகக் கிராமப்பகுதிகளில் 6 முதல் 14 வயதுள்ள 99.4 சதவிகித குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். 

* 11 முதல் 14 வயதுள்ள பெண்குழந்தைகளில் 99.1 சதவிகிதம் பேர் பள்ளிக்குச் செல்கின்றனர். 

இவ்விரண்டு அம்சங்களிலும் இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. 

தமிழ் வாசிப்பின் அவல நிலை! * ஒன்றாம் வகுப்புப் படிக்கும் 43.4 சதவிகித குழந்தைகளால் மட்டுமே எழுத்துகளை அடையாளம் காண முடிகிறது. 

* இரண்டாம் வகுப்புப் படிக்கும் 43.6 சதவிகித குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 

* ஐந்தாம் வகுப்புப் படிக்கும் 29.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே இரண்டாம் வகுப்பு கதையை வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 46.8 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

கணக்கு பிணக்கு ஆமணக்கு! * ஒன்றாம் வகுப்பில் 53.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே ஓரிலக்க எண்ணை (1 முதல் 9 வரை) அடையாளம் காணமுடிகிறது. 

* இரண்டாம் வகுப்பில் 54.2 சதவிகித குழந்தைகளால் மட்டுமே ஈரிலக்க எண்களை (11 முதல் 99 வரை) அடையாளம் காண முடிகிறது. 

* ஐந்தாம் வகுப்பில் 13 சதவிகித குழந்தைகளால் மட்டுமே எளிய வகுத்தல் கணக்கைப் போடமுடிகிறது.

ஸ்ரீனிவாச ராமானுஜனின் 125-வது பிறந்த ஆண்டையொட்டி, தேசிய கணித ஆண்டு கொண்டாடப்பட்ட வேளையில் தமிழக அளவில் மட்டும் அல்ல... இந்திய அளவிலும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு கணக்குப் பாடத்தில் நல்ல கற்றல் நிலையை எட்ட முடியவில்லை என்பது துயரத்துக்குரிய முரண். 

ஆங்கிலம் நன்றாக ... * தமிழகத்தில் ஆங்கிலத்தில் எளிய வார்த்தயை வாசிக்க முடிந்த குழந்தைகளின் சதவிகிதம், இந்தியாவின் சராசரியை விட அதிகமாகக் காணப்படுகிறது. 

* ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 57.1 சதவிகித தமிழகக் குழந்தைகளால் ஆங்கிலத்தில் எளிய வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 48 சதவிகிதமாகவே உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள், தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகிறது என்பதையும் அசர் ஆய்வு முடிவுகள் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள்: 

* 49.3 சதவிகித பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம், கல்வி உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளது. 

* 81.7 சதவிகித பள்ளிகளில் ஆசிரியர் - வகுப்பறை விகிதாச்சாரம், கல்வி உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளது. 

* 80.8 சதவிகித பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது. 

* 66.1 சதவிகித பள்ளிகளில் முழுமையான சுற்றுச்சுவர் உள்ளது. 

* 68.9 சதவிகித பள்ளிகள் மட்டுமே கழிவறைகள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...