|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2013

எங்கள் மக்களைக் கொல்வதற்கு எங்கள் வரிப்பணம் !



சிங்கள பௌத்த இனவெறி அரசு, ஈழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததை ஐ.நா. செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சேனல்-4 உள்ளிட்ட அனைத்துலக முன்னணி ஊடகங்கள் இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. இவை அனைத்தும் உலகம் முழுவதிலும் பேசப்பட்டாலும், 7 கோடித் தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டை ஆளும் இந்திய அரசு, ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழ்ப் பொதுமக்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்ட கொடுமையை இனப்படுகொலை என்று இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை தமிழீழப் படுகொலையை “இனப்படுகொலை” என்று தீர்மனம் இயற்ற முடியாது என காங்கிரசு ஆட்சி மட்டுமல்ல, நடுவண் அரசில் இல்லாத பா.ச.க., சமாஜ்வாதி கட்சி, பகுசன் சமாஜ் கட்சி, ஐக்கிய சனதா தளம், திரிணமுல் காங்கிரசு,  சி.பி. எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூறியுள்ளன.

இந்தியத் தேசியக் கட்டமைப்பில், தமிழ் இனத்திற்கு எதிராக செயல்புரிவதில் இடது சாரி, வலதுசாரி என்று வேறுபாடில்லை. பார்ப்பன - இந்துத்துவாக் கட்சி, பிற்படுத்தப்பட்டோர் கட்சி, தாழ்த்தப்பட்டோர் கட்சி என்ற மாறுபாடில்லை. இந்திய தேசிய அரசியல் தலைமை அனைத்தும் தமிழினப் புறக்கணிப்பில் ஒரே சிந்தனை கொண்டுள்ளன. 2008-2009 இல் இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரில் இந்திய அரசும் பங்கு கொண்டது போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு வலுவற்ற தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்மொழி ந்தது. மன்மோகன் - சோனியா ஆட்சி அத்தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்யும் திருத்தங்களைச் செய்து இராசபட்சே கும்பல் மீது துரும்பும் படாமல் பாதுகாத்துள்ளது.

அரபிக் கடலில் இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, இத்தாலியுடன் தூதரக உறவையே முறித்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளது இந்தியா. ஆனால், நாதியற்ற 600 தமிழ் மீனவர்களைச் சிங்களப்படை சுட்டுக் கொன்றதற்கு ஒரு கைது கிடையாது. ஒரு வழக்கு கிடையாது.இத்தனைக்குப் பிறகும் இந்தியாவுக்கு நாம் ஏன் வரிகொடுக்க வேண்டும்? நம் பணத்தைக் கொண்டு நம் இனத்தை அழிக்க ஆயுதம் வாங்கவா? என்ற கேள்வி தமிழர்கள் மனதில் பூதாகரமாக இந்நிலையில் எழுந்துள்ளது.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...