|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 March, 2011

அதிகாரிகள் மாற்றம் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது: தேர்தல் ஆணையம்

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்தார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:
 இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்த முழு அதிகாரம் உள்ளது. அதை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தேர்தலுக்காக ஒரு குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்துவதும், குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்தாமல் இருப்பதும் தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.  நமது நாட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்துவதும், தனிநபர் அல்லது கட்சியின் பண பலத்தால், ஜனநாயக நடைமுறை தோல்வியுறாமல் பார்த்துக் கொள்வதும், தேர்தல் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தண்டிப்பது மட்டுமல்லாமல் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி தேர்தல் குற்றங்களைத் தடுப்பதும் ஆணையத்தின் கடமை.

எந்த டி.ஜி.பி.யிடம் தேர்தலை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் உள்ளது.  அதனால் டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனத்துக்கும் தேர்தல் நேரத்தில் யார் டி.ஜி.பி.யாக இருக்க வேண்டும் என்பதற்கும் தொடர்பு இல்லை. அவரது நியமனத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்பது இந்த வழக்குக்கு தொடர்புடையது அல்ல.  சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியே தேர்தல் ஆணையத்தின் முடிவு பற்றி கேள்வி கேட்கவில்லை. அதனால், அது தொடர்பான முதல்வரின் அறிக்கையை வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையற்றது.  தமிழ்நாட்டில் 2006 உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இந்த உயர் நீதிமன்றம் லத்திகா சரணை சாடியுள்ளது.  அத்தகைய சூழலில் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக வேறோர் அதிகாரியை தேர்தலை நடத்தும் பொறுப்புக்கு நியமிப்பது தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது. எனவே, அத்தகைய நடவடிக்கையை பாரபட்சம் என்று கூற முடியாது.  தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம், வருமான வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறப்பு அதிகாரம் உள்ளது.  அவற்றின் கீழ் வாகனங்கள், வீடுகள் போன்றவற்றில் சோதனை செய்து, பொருள்களைப் பறிமுதல் செய்ய முடியும். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.  எனவே, தேர்தல் நடவடிக்கைகளை எதிர்க்கும் எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.    "மாநில அரசையும் கலந்தாலோசிக்க வேண்டும்'  சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறியதாவது:  தேர்தல் ஆணையம், தேர்தலை நியாயமாக, நேர்மையாக, வெளிப்படையாக நடத்துவதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறது.  தேர்தல் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு வெற்றி கிடைக்கிறதென்றால் அந்தப் பெருமை மாநில அரசையும் சாரும்.  எனினும், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது தேர்தல் ஆணையம் மாநில அரசையும் கொஞ்சம் கலந்தாலோசித்தால் நன்றாக இருக்கும்.  ஏனெனில், தமிழக டி.ஜி.பி. யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவரை டி.ஜி.பி. பணியில் இருந்து தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.  மேலும், மாற்றப்படும் அதிகாரிகளுக்குப் பொறுப்பு வழங்கப்படாதபோது அவர்களுடைய பணி பதிவேட்டில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. எனவே, அவ்வாறு மாற்றப்படுகிறவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...