|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 July, 2011

24 நிறுவனங்கள் மூலம் கைமாறிய ஸ்பெக்ட்ரம் பணம்- நாளை நிரா ராடியாவின் டேப் நீதிமன்றத்தில் தாக்கல்!

2ஜி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளின் மனைவி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட மேலும் 10 பேரை சாட்சியாக சேர்க்க அனுமதிக்குமாறு டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இவர்களோடு மேலும் 28 ஆவணங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. முன்னதாக இன்று நிரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சிடிக்களை இன்று சிபிஐ தாக்கல் செய்ய இருந்தது. ஆனால், அதை பின்னர் தாக்கல் செய்வதாக சிபிஐ கூறிவிட்டது.

அதே நேரத்தில் அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கோயங்காவின் மனைவி அசீலா, கோயங்காவின் சகோதரர் பிரமோத் மற்றும் உறவினர் யஷ்வர்தன் ஆகியோரை சாட்சிகளாக சேர்க்க அனுமதிக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் சிபிஐ இன்று கோரிக்கை விடுத்தது.

மேலும் நிரா ராடியா-கனிமொழி, ராடியா-ராசா ஆகியோர் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சிடிக்கள் தவிர மேலும் 28 ஆவணங்களையும் தாக்கல் செய்வதாக சிபிஐ கூறியுள்ளது.

இந்த 28 ஆவணங்களில் நிரா ராடியாவிடம் கடந்த மே மாதம் 12ம் தேதி நடத்திய விசாரணையின் விவரம், டைகர் டிரேடர்ஸ் நிறுவனத்திலிருந்து ஸ்வான் கேபிடல் நிறுவனத்துக்கு நடந்த பண பரிமாற்றம், டிபி ரியாலிட்டி நிறுவன போர்ட் மீட்டிங்கில் நடந்த உரையாடல் விவரங்கள் ஆகியவை அடங்கும்.

ஆனால், சாட்சிகளாக உறவினர்களை சேர்ப்பதற்கும், புதிய ஆவணங்களை தாக்கல் செய்வதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து இதன் மீது அடுத்த வாரம் முடிவை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இந் நிலையில் நிரா ராடியாவின் உரையாடல்கள் அடங்கிய டேப்பை சி.பி.ஐ. நாளை தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே நீரா ராடியாவின் உரையாடலின் ஒரு பகுதிதான் வெளியாகியுள்ளது. நாளை இந்த உரையாடலின் முழு விவரமும் தாக்கல் செய்யப்பட்டால் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 நிறுவனங்கள் மூலம் கைமாறிய பணம்: இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கை மாறியது தொடர்பான புகார்களை அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சைப்ரஸ், மொரீசியஸ் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தியதில் 24 நிறுவனங்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர்.

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது 2 மாதத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த 24 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களில் தொடங்கப்பட்டுள்லன. இந்த 24 நிறுவனங்களும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வந்துள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...