|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 August, 2011

அமெரிக்காவில் "தமிழ்த்தாய்க்கு சிலை'...!

 சுவாமிமலையில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தாய் படிமம், அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கும்பகோணம் அருகிலுள்ள, சுவாமிமலை குபேரன் சிற்பக்கூட ஸ்தபதி மோகன்ராஜ், "பெருந்தச்சன்' என்ற பெயரை தாங்கி சிற்பங்களை செய்து வருகிறார். இவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தஞ்சை பல்கலை சிற்பத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின், தென் கரோலினா பகுதியில் தமிழ்ப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் நிர்வாகிகள் அரிநாத், தண்டபாணி ஆகியோர், ஸ்தபதி மோகன்ராஜை சந்தித்து, தமிழ் உணர்வை பறைசாற்றும் வகையில், தமிழ்த்தாய் படிமத்தை வடிவமைத்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, 30 கிலோ எடை கொண்ட, ஒன்றரை அடி உயரமுள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட, பஞ்சலோக தமிழ்த்தாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தாயின் இடது கையில், ஓலைச்சுவடியும், வலது கையில் செங்கோலுக்கு பதில் காந்தள் மலரும், தலையில் கிரீடம், பின்னணியில் உள்ள வட்டத்தில் மூவேந்தர் மன்னர்களின் சின்னங்களான, கயல், புலி, வில் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாய் காலில் சிலம்பும், இடுப்பில் பதக்கமும், காதுகளில் அகன்றத் தோடும், ஐவகை நிலங்களை ஆடைகளாக அணிந்திருக்கிறார். தமிழ்த்தாய் சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்த அமெரிக்கத் தமிழர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, சிலையை வடிவமைத்த மோகன்ராஜ் பெயரும் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புமிக்க தமிழ்த்தாய் படிமம், கடந்த வாரம் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு, அங்கு தமிழர்களால் நகர்வலம் செய்யப்பட்டு, கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் முன்னிலையில், அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...