|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 August, 2011

கிராமப் பெண்களுக்கு இலவச நேப்கின் வழங்கும் திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு!

கிராமப்புற இளம் பெண்களுக்கு நோய்த் தொற்று உள்ளிட்டவற்றைத் தடுக்கும் வகையில் இலவசமாக நேப்கின் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்துக் கூறியதாவது:

இளம் பெண்களிடையே சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, எதிர்வரும் காலத்தில் தொற்று நோய்களையும், கருவுறாமையின் ஆபத்தையும் குறைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

கிராமப்புறங்களில் வாழும் இத்தகையப் பெண்களுக்கு ஆறு சானிடரி நாப்கின் உள்ள ஒரு பேக்கெட் ஆறு ரூபாய் என்ற மானிய விலையில் பத்து மாவட்டங்களில் விநியோகிக்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட நிர்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படும் கிராம சுகாதார செவிலியர்களின் மூலமாக மாநிலத்திலுள்ள கிராமப்புறங்களில் வாழும் இளம்பெண்களுக்கு சானிடரி நாப்கின் இலவசமாகவே வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கு 46 கோடி ரூபாய் செலவாகும்.

பொது காப்பீட்டுத் திட்டம்: அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்க இந்த அரசு ஒரு முழுமையான பொதுக் காப்பீட்டுத் திட்டத்தைப் புதிதாக அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, "முதல்வரின் விரிவான பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம்" என்ற மேம்படுத்தப் பட்ட இப்புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

முந்தைய அரசு செயல் படுத்திய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் இந்தப் புதிய திட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் ஓர் ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் காப்பீடாக நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும் வகையிலும், காப்பீட்டுக்காலம் மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்கத்தக்க வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட ஒரு சில நோய்களுக்கு காப்பீட்டு வரம்பு ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை முறைகள் அதிகரிக்கப்பட்டு குறிப்பாக மருத்துவ பராமரிப்புக்கும், குழந்தை பிறப்புக்கு பின் தேவைப்படும் சிகிச்சைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இப்புதிய திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ வசதிகள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...