|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 August, 2011

பாகிஸ்தானில் இருந்து கள்ள நோட்டுகள் தமிழகத்தில் புழக்கம்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு, வங்கதேசம் வழியாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஐந்து பேர், கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 5.80 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, பெரியமேடு ஈ.வி.ஆர். சாலையில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, "பைக்'கில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் வாகனத்தைத் திருப்பி, ஓட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து சோதனையிட்டதில், 500 ரூபாய் நோட்டுகளாக, ஒரு லட்ச ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரிடம் பிடிபட்ட, மண்ணடியைச் சேர்ந்த முகமது பரூஷ் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் கொடுத்த தகவலின்படி, பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத்ஷேக், தஞ்சாவூரை சேர்ந்த ஷாஜகான் மற்றும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ரமணன் ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, 4.80 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 500 ரூபாய் கள்ள நோட்டுகள், பைக், ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, நல்ல நோட்டுகளாக மாற்றி வைத்திருந்த 98 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மசூத் ஷேக், 20, வங்கதேசம் அருகேயுள்ள மேற்குவங்கம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு, பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் வழியாக, கள்ள நோட்டுகளை ஒருவர் கொடுப்பதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்ற நால்வரும், இவனிடமிருந்து கள்ள நோட்டுகளை பெற்று, நல்ல நோட்டுகளாக மாற்றிக் கொடுத்து வந்துள்ளனர். இவர்கள், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி? : பாகிஸ்தானிலிருந்து, தமிழகத்தில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள, 500 ரூபாய் கள்ள நோட்டுகள், ஒரிஜினல் நோட்டுகளை போலவே அமைந்துள்ளன. ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டில் உள்ள ஆர்.பி.ஐ., என பொறிக்கப்பட்ட மெல்லிய வெள்ளிக் கம்பி, நோட்டுகளை அசைக்கும் போது நிறம் பச்சை, நீலம் என மாறி மாறி வரும். ஆனால், கள்ள நோட்டில் அவ்வாறு தெரியாது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...