|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 October, 2011

3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் வைகோ!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தபோது மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வழக்கில் ஆஜராவதற்கு வசதியாக வேறொரு தேதிக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இன்று இந்த வழக்கு விசாரணையின் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவரான பேரறிவாளன் சார்பில் வைகோ ஆஜரானார். பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களின் மீதான விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நடந்தது. மத்திய அரசு இந்த மனுக்களுக்கு தாக்கல் செய்த பதில் மனுவில், மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.

மாநில அரசு தாக்கல் செய்த பதில் மனுவிலும், அந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வைகோ தன் வாதத்தில் குறிப்பிடுகையில், இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை கடந்த அக்டோபர் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் நடந்தது. மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவர்கள், அந்த மனுவை எதிர்த்துத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், 19ம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரித்தது. அப்போது, ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் முன் வாதங்கள் முடிவு பெற்றுள்ளதை ஜேத்மலானி சுட்டிக் காட்டினார். இதையடுத்து அந்த 3 நீதிபதிகள் பெஞ்ச், அந்த மனு மீதான விசாரணையை, தங்கள் நீதிமன்றத்தில் இருந்து விடுவித்தனர். எனவே மேற்கூறிய விசாரணை, ஏற்கனவே நடைபெற்ற, 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிலேயே தொடர்ந்து விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, வழக்கறிஞர் ஜேத்மலானி அவர்கள், சென்னையில் வந்து வாதிடுவதற்கும், இந்த நீதிமன்றத்துக்கும் வசதியான ஒரு தேதிக்கு, இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார் என்று மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-வைகோ: முன்னதாக பேரறிவாளன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது விசாரணை அமைதியாக நடந்தது. ஆனால் கோர்ட்டில் கொந்தளிப்பும், பதட்டமும் இருந்ததாக கூறி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க கூடாது என நினைக்கும் மத்திய அரசு பின்னணியில் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த 3 பேரின் தண்டனையை குறைக்கும்படி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கதக்கது. அதே போல தமிழக அமைச்சரவை 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161யை பயன்படுத்தி கவர்னருக்கு பரிந்துரை செய்வதன் மூலம் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை சட்டப்பூர்வமானது அல்ல. அதை மீறி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...