|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 October, 2011

கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை பரிதி!


கருணாநிதியின் கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை,'' என, தி.மு.க., துணை பொதுச் செயலராக இருந்த பரிதி இளம்வழுதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபைத் தேர்தலின் போது, கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து புகார் அளித்தேன். அதன்படி, அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், எவ்வித விளக்கமும் பெறாமல் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகார் கொடுத்த என்னிடமும், விளக்கம் பெறவில்லை.இதுபோல, மாநிலம் முழுவதும் கட்சி மீது அதிருப்தி கொண்டவர்கள் உள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, என் பிரச்னை உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை செய்வேன்.என் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் முடிவை, கட்சித் தலைவர் கருணாநிதி மனப்பூர்வமாக செய்திருக்க மாட்டார். அவரைத் தாண்டி உள்ள அதிகார மையம் தான், இதைச் செய்துள்ளது. கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை.

இப்பிரச்னை எழுந்த நிலையில், பொருளாளர் ஸ்டாலினை சந்திக்க நான்கு முறை முயற்சித்தேன். ஆனால், அவர் என்னை சந்திப்பதை தவிர்த்து விட்டார். அதற்கு காரணம் என்வென்று தெரியவில்லை.கட்சித் தலைமையை சந்தித்து, விளக்கம் கொடுக்கவும் நான் செல்லவில்லை. கருணாநிதியையும், ஸ்டாலினையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். எழும்பூர் தொகுதி தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சி பேச்சாளர் ஆகிய பொறுப்புகளில் உள்ளேன். கட்சியில் தொடர்ந்து என் பணியைச் செய்வேன்.என் போன்றவர்களையும், அடக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் கைதூக்கி விடவே தி.மு.க., துவங்கப்பட்டது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக என் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டனர் என சொல்ல முடியாது.அ.தி.மு.க., அரசு வழக்கு தொடரும் என பயந்து, கட்சியை விமர்சிப்பதாகக் கூறுவதை ஏற்க மாட்டேன். கடந்த 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக தனியொரு நபராகச் செயல்பட்டவன். எனவே, அ.தி.மு.க., அரசு வழக்கு தொடரும் என்பதற்கு பயந்து, கட்சியை விமர்சிக்கவில்லை.இவ்வாறு பரிதி இளம்வழுதி கூறினார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...