|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 November, 2011

சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை!


போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் ரத்து அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை ஆகிய கடுமையான தண்டனைகள் உண்டு. இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் காரணமாக, விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகின்றன. விபத்தில், நான்கு நிமிடங்களுக்கு ஒரு உயிர் பலியாகிறது. கடந்தாண்டில் மட்டும், விபத்துகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை கடுமையாக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும், புதிய சட்ட திருத்த மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிக வேகம், அபாயகரமான டிரைவிங், வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விதிமுறை மீறல்களுக்கு, தற்போது 100 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வரம்பை, குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். பதிவெண் இல்லாத வாகனத்தை ஓட்டுபவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு, சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சக ஒப்புதல் கிடைத்த பின், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...