நாட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 560 பேர், சி.பி.ஐ.,யால் தேடப்பட்டு வருகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதால், சி.பி.ஐ.,யால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல், வெளிநாடுகளிலும் சர்வதேச போலீசால் தேடப்படும் இந்தியர்கள் பட்டியலில், 650 பேர் உள்ளனர்.பயங்கரவாதம், கடத்தல், வங்கி மோசடி, கள்ளநோட்டு வினியோகம், போதைப் பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டு, சி.பி.ஐ., விசாரித்து வரும் வழக்குகளில், நம் நாட்டில் மட்டும், 560 பேர் தலைமறைவாகியுள்ளனர். இவர்களில் பலரையும் பல ஆண்டுகளாக, சி.பி.ஐ., தேடி வருகிறது.
தலைமறைவாகிவிட்டவர்கள் பலர், வேறு பெயர்களில் பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க, சி.பி.ஐ., நேரடியாக நடவடிக்கையில் இறங்க முடியாது என்பதால், சர்வதேச போலீஸ் உதவி நாடப்பட்டுள்ளது.ஆனால், சி.பி.ஐ.,கோரிக்கையை சர்வதேச போலீஸ் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு காரணம், இதை விட வேறு பெரிய வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை தேடவே, அவர்களுக்கு நேரம் போதவில்லை. சி.பி.ஐ., விசாரித்து வரும் வழக்குகளில், முக்கியமானதாக கருதப்படும், 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 10 பேர், சம்பவம் நடந்து, 18 ஆண்டுகளாகியும், சி.பி.ஐ.,யிடம் சிக்காமல் உள்ளனர். அதேபோல், 2007 ஐதராபாத் பள்ளி வாசலில் நடந்த தாக்குதலில், இரண்டுபேர் இன்னமும் சிக்கவில்லை.
இவர்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்சம் வரை வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.,யால் தேடப்படும் குற்றவாளிகளில் சிலர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல், பல வெளிநாடுகளில் நிகழ்ந்த குற்றங்களில் ஈடுபட்டு, தலைமறைவாக உள்ள இந்தியர்கள், 650 பேரை சர்வதேச போலீசார் தேடி வருகின்றனர். இதில், மும்பை தாக்குதல், கேரளாவில் பேராசிரியர் கைவெட்டிய சம்பவம் உட்பட, பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவான இந்தியர்களும் அடக்கம்.பேராசிரியர் கை வெட்டிய வழக்கில், முக்கிய குற்றவாளியான நாசர், அரபு நாடு ஒன்றில் பதுங்கி உள்ளார். இவரை பிடிக்க வெளிநாடுகளில் பல்வேறு அரசுகளிடம் முறையிட்டும், இதுவரை பலனில்லை

No comments:
Post a Comment