|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 December, 2011

வங்கதேசத்தில் கல்லூரிக்கு படிக்க சென்ற மனைவியின் வலது கைவிரல்களை வெட்டிய கணவண்!


வங்கதேசத்தில் கல்லூரிக்கு படிக்க சென்ற மனைவியின் வலது கைவிரல்களை வெட்டிய கணவனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம் (30) இவர் ஹவா அக்தர் ஜூய் (21) என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஐக்கிய அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்றார். கணவன் தன்னோடு இல்லாத நிலையில், ஹவா அக்தர் ஜூய் கல்லூரியில் சேர்ந்து படித்து உள்ளார். இது குறித்து ஹவா, கணவரிடம் போனில் பேசும் போது தெரிவித்து உள்ளார். மனைவி கல்லூரியில் படிப்பதை அறிந்த இஸ்லாம், கல்லூரி படிப்பை நிறுத்துமாறு எச்சரித்து உள்ளார். ஆனால் ஹவா இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் திடீரென நாடு திரும்பினார் ரபிகுல் இஸ்லாம். தனது மனைவி ஹவாவிடம் ஒரு ஆச்சரியமான பரிசு கொடுப்பதாக கூறி, கண்களை ஒரு துணியால் கட்டினார். பின்னர் ஹவாவின் கை, கால்களை ஒரு கயிற்றால் கட்டி, வாயில் துணியை திணித்தார். அதன்பிறகு ஹவாவின் வலது கையில் இருந்த 5 விரல்களையும் கொடூரமான முறையில் வெட்டினார் இஸ்லாம்.

வலியால் துடித்த ஹவாவிடம் கல்லூரிக்கு சென்று படித்த குற்றத்திற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார் அவர். ஹவாவிற்கு இந்த தண்டனை அளிப்பதற்கு இஸ்லாமின் சில உறவினர்களும் ஆதரவாக செயல்பட்டு உள்ளனர். கையில் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் மயக்கமடைந்த ஹவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காலதாமதமாக கொண்டு வரப்பட்டதால் விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இது குறித்து ஹவா கூறியதாவது, கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டாம் என்ற கணவர் கூறினார். ஆனால் அவர் நாடு திரும்பிய மகிழ்ச்சியில் இருந்த போது, எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பரிசளிப்பதாக கூறி எனது விரல்களை வெட்டிவிட்டார். கல்லூரி படிப்பிற்காக இவ்வளவு கொடூரமாக எனது கைவிரல்கள் வெட்டப்படும் என்று எனது கனவில் கூட நினைக்கவில்லை.

வெட்டப்பட்ட விரல்களை இஸ்லாமின் உறவினர் ஒருவர் குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். அந்த விரல்களை தேடி எடுத்து டாக்டர்களிடம் கொண்டு வருவதற்குள் காலதாமதம் ஏற்பட்டதால், எனது விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். தற்போது எனது தந்தையின் வீட்டில் உள்ள நான், மீண்டும் எனது கணவரோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனது இடது கையால் எழுதி பழகி எனது கல்லூரி படிப்பை முடிப்பேன், என்றார். போலீசார், இஸ்லாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...