|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 January, 2012

ஊதியதற்கு அபராதம் ரூ. 23 லட்சம் வசூல்.


பொது இடங்களில் புகை பிடிப்போரிடம் இருந்து கடந்த 15 மாதத்தில் மட்டும் ரூ.23 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக புகையில்லா சென்னை நகர திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சென்னை நகரை முற்றிலும் புகையில்லா நகரமாக மாற்ற முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் 110 கோடி பேரில் 12 கோடி பேர் புகைபழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர். 60 கோடி இளைஞர்களில் கணிசமானோர் சிகரெட், பீடி போன்ற புகைபொருள்களால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதையும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இளவயதிலேயே புற்றுநோய், நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு போன்றவற்றுக்கு ஆளாக நேரிடுகிறது.

நாடு முழுவதும் அமல் மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புகைபழக்கத்தை படிப்படியாக மக்கள் மத்தியிலிருந்து அகற்றும் நோக்கில், 2008-ல் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் முயற்சியால் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து நாடுமுழுவதும் 2008-ம் ஆண்டு அக். 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று பொது இடங்களில் புகைபிடித்தல் தடைச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பெருவாரியாக வரவேற்பு இருந்தது.

தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க கடந்த 2010-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும் சினிமா, டி.வி. சேனல்களிலும் புகை பிடிக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கை வாசகங்கள் காட்டும் படி சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து டி.வி-சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வெகுவாக குறைந்தன. மேலும் தடையை மீறி புகை பிடிப்போரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் காரணமாக பொது இடங்களில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்தது. 

புகையில்லா நகரம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சென்னையை புகையில்லா நகரமாக்கத் தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுபற்றி புகையில்லா சென்னை நகர திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜே. கோவர்தன் கூறியதாவது, பொது இடங்களில் புகை பிடிப்போரிடம் இருந்து கடந்த 15 மாதத்தில் மட்டும் ரூ.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் பெட்டிக்கடைகள், டீக்கடைகள், அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், சாலையோரங்கள், ரெயில்-பஸ் நிலையங்களில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைத்துள்ளோம். இதனால் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

புகையிலையின் தீமை பற்றி மேலும் பல்வேறு பகுதிகளில் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஏப்ரல் மாதத்திற்குள் சென்னையில் பொது இடங்களில் புகை பிடிப்பது 100 சதவீதம் அளவுக்கு குறைந்து விடும் என்றார். கடந்த செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட ஆய்வில், அபராதம் காரணமாக பொது இடங்களில் புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...