|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 January, 2012

மைனஸுக்குப் போன உணவுப் பணவீக்கம்!!


கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக மைனஸ் நிலைக்குப் போயிருக்கிறது நாட்டின் உணவுப் பணவீக்கம்.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு -3.36 சதவீதமாகக் குறைந்துள்ளது உணவுப் பணவீக்கம். புத்தாண்டின் முதல் உணவுப் பணவீக்க அறிக்கையை இன்று மத்திய அரசு வெளியிட்டது. 

இதில், கடந்த வாரத்திற்கான உணவுப்பணவீக்கம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 24-உடன் முடிவடைந்த வாரத்துக்கான நாட்டின் உணவுப்பணவீக்கம் -3.36 சதவீதமாக உள்ளது. இது கடுந்த 6 வருடங்களில் இல்லாத வீழ்ச்சியாகும். இது நாட்டின் வளர்ச்சியை காட்டுவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். விளைச்சல் அதிகரித்து, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலைகள் கடுமையாக குறைந்ததாலே இந்த நிலை என அவர் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளாக இரட்டை இலக்கத்தில் இருந்து கவலை அளித்து வந்த உணவுப்பணவீக்க விகிதம் கடந்த ஒன்றரை மாதங்களில் சரிந்தபடியே இருந்து வந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் உணவுப் பணவீக்கம் +0.42% இருந்தது. முதன் முதலாக தற்போது மைனஸுக்கு வந்துள்ளது. இந்த நிலையை உணவுப் பணவாட்டம் என பொருளியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். உணவுப் பணவீக்கம் இந்த அளவு வீழ்ச்சி கண்டாலும், மொத்த விற்பனை விலை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் ஒட்டுமொத்த பணவீக்கம் 9.11%ஆக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்த நிலையே தொடர்ந்தால், வரும் நாட்களில் மொத்த பணவீக்கம் 6 சதவீதத்துக்கு வந்துவிடும் என பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... கடந்த 2009 - 2010-ம் ஆண்டுகளில் நாட்டின் மொத்த பணவீக்கமும் திடீரென மைனஸ் லெவலுக்கு வந்துவிட்டது. ஆனால் நாட்டில் விலைவாசி கடுமையாக இருந்தது (பணவீக்கம் குறைந்தால் விலையும் குறைய வேண்டும் என்பது பொருளியல் நியதி). இதனால் நாட்டின் பணவீக்கக் கணக்கெடுப்பு முறை கடும் விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளானது. இதனால் திடீரென பொதுப்பணவீக்க விகிதம் குறித்த புள்ளிவிவரங்களை நிறுத்திக் கொண்ட மத்திய அரசு, உணவுப் பணவீக்கத்தை மட்டும் கணக்கிட்டு வெளியிட்டு வந்ததது. இப்போது அந்த உணவுப் பணவீக்கம் அதள பாதாளத்தில் சரிந்து மைனஸ் ஆகிவிட்டது. அப்படியெனில் உணவுப் பொருள் விலைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டிருக்க வேண்டும் நடைமுறையில். விலை குறைந்ததா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...