|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2012

இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம்!


கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற, பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது."கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில் கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு துணைபோகும் விஷயங்கள், மத உணர்வை புண்படுத்தும் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.


இந்தியாவின் இணையவெளி தடையற்றதாக உள்ளதால், இளம் தலைமுறை ஆபாசம், வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு துணைபோக இந்த இணையதளங்கள் துணைபோகின்றன. இவற்றால் மதக் கலவரம் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது இந்த இணையதளங்களை வழங்கும் கூகுள் போன்ற நிறுவனங்கள் சென்சார் செய்ய வேண்டும்", எனக்கோரி டெல்லியைச் சேர்ந்த வினய் ராய் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.கூகுளின் ஆர்குட், யு ட்யூப் மற்றும் யாஹூ தளங்களில்தான் அதிக அளவு மதவெறியைத் தூண்டும் வகையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கடவுள்களை மிக மோசமாக சித்தரித்துள்ளதாக இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார் மனுதாரர்.



இந்த வழக்கு விசாரணையின்போது கூகுள் உள்ளிட்ட 21 நிறுவனங்களும், இணையவெளியில் தணிக்கை முறைகளை மேற்கொள்ள முடியுமா... மோசமான விஷயங்களை தடை செய்ய முடியுமா என்பது குறித்து மார்ச் 13-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.இந்த சம்மனுக்கு எதிராக கூகுள், யாஹூ, பேஸ்புக் உள்ளிட்ட 21 நிறுவனங்களும் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தன. அதில் இந்தியா சர்வாதிகார நாடல்ல, ஜனநாயக நாடு. ஆபாசம் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் இங்கே சட்டப்படி தடை செய்ய முடியாது என வாதிட்டன.இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடக்கவிருக்கிறது.



இந்த நிலையில் சுவிட்ஸர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் இந்தியாவிலிருந்து 113 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர்.இதில் கூகுளின் இந்தியப் பிரிவுக்கான தலைமை விற்பனை அலுவலர் நிகிலேஷ் அரோரா கூறுகையில், "இந்தியாவில் இணையவெளியை சென்சார் செய்வது இயலாத காரியம். அப்படிச் செய்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கருத்து சுதந்திரத்தில் குறுக்கிடுவது போலாகிவிடும்," என்றார். மேலும் கூறுகையில், "எல்லாவற்றையும் தணிக்கை செய்து, சுத்தமான விஷயமாகத் தருவது அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமாகப் போய்விடும். மேலும் இந்தியாவின் இணையவெளியில் கூகுள் மூலம் வரும் ஆபாச- மத வெறி விஷயங்களுக்கு இந்தியாவில் இயங்கும் அந்த நிறுவனக் கிளை பொறுப்பாகாது," என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...