|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2012

அன்னியமாகிப்போன, நம் நாட்டுப்புற கலையையும் கற்பித்து தர...




சுவையாக கொடுக்க வேண்டிய கல்வியை, சுமையாக கொடுப்பதன் காரணமாகவும், மதிப்பெண்களே வாழ்க்கையாகிப் போனதாலும், இப்போது உள்ள குழந்தைகளுக்கு அறிவு வளர்கிறது; ஆனால், உடல் தேய்கிறது.விளையாட்டு என்பது, கம்ப்யூட்டர் அல்லது "டிவி' யோடு முடிந்து விடுகிறது. பேச்சு என்பது செல்போனில் மட்டுமே. குறுஞ்செய்திதான், சுவாசம்.எட்ட இருக்க வேண்டிய எலக்ட்ரானிக் சாதனம், அளவு கடந்த முறையில் வயது வித்தியாசம் பாராமல், கிட்டவந்ததும் அல்லாமல், இப்போது பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தை முடக்கவும் செய்கிறது. குழந்தைகளுக்கு, அறிவும் வேண்டும், அதே நேரம் ஆரோக்கியமும் வேண்டும், சென்னை போன்ற ஊர்களில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு, அன்னியமாகிப்போன, நம் நாட்டுப்புற கலையையும் கற்பித்து தர வேண்டுமென்று ஆழமாக யோசித்த, சென்னை ஆதம்பாக்கம் தூய பிரிட்டோ பள்ளி குழுமத்தின் தாளாளர் விமலா, தன் பள்ளி குழந்தைகளுக்கு கரகம், காவடி, ஒயிலாட்டம், சிலம்பம் போன்ற கலைகளை கற்றுத்தர ஏற்பாடு செய்து விட்டார்.

அதுவும், எந்த பகுதியில், எந்த கலை சிறப்பாக உள்ளது என்பதை அறிந்து, அந்த பகுதி கலைஞர்களை கொண்டுவந்து கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளார். சிலம்பம் என்றால், மதுரை மாடக்குளம் பகுதிதான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். அங்கிருந்து சிலம்பு மணி என்ற கலைஞர் வந்துள்ளார். இதே போல தப்பாட்டம், ஒயிலாட்டம் கற்றுத்தர, தங்கபாண்டியன் வந்துள்ளார். இந்த கலைஞர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருபவர், வாசகன் என்பவர்.படிப்பிற்கு இடையூறு இல்லாமல், விளையாட்டுக் கான நேரத்தில் தரப்பட்ட, இந்த பயிற்சி காரணமாக, மூன்று மாத காலத்தில், இங்குள்ள பள்ளி மாணவியரும், மாணவர்களும் தப்பாட்டத்தில், செம்மடிகுச்சி அடியையும், வலசரக்குச்சி அடியையும் லாவகமாக பயன்படுத்தி, தப்பாட்டத்தை, தப்பே இல்லாமல் அடிக் கின்றனர். சிலம்பத்தில், எட்டு வீடு கட்டி அசத்துகின்றனர். இதே போல கரகம், ஒயிலாட்டத்தில் அபார திறமையை காட்டுகின்றனர்.

நம் பண்பாட்டை பறைசாற்றும் நாட்டுப்புற கலைகளை, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் நோக்கோடு, இந்த பயிற்சியை ஆரம்பித்தபோது, விருப்பம் உள்ள குழந்தைகள் கற்றுக் கொள்ளலாம் என்றனர், அப்போது எல்லா குழந்தைகளும் தங்களது கையை தூக்கி, தங்களுக்கு விருப்பம் என்று தெரிவித்த போதுதான், குழந்தைகளுக்கு, நாட்டுப்புற கலைகள் மீது உள்ள ஆர்வம் தெரிய வந்தது.உங்களது பள்ளியிலும் நாட்டுப்புற கலைகள் கற்றுக் கொடுத்து, நாளைய தலைமுறைக்கு நம் கலாசாரத்தை, பண்பாட்டை கொண்டு செல்ல விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:99426 58054,97886 90798.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...